×

கர்நாடகாவில் விளைச்சல் பாதிப்பு எதிரொலி; ஏற்காடு காபிகொட்டை விலை மூட்டைக்கு ரூ.2500 அதிகரிப்பு: ஒரே மாதத்தில் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்: கர்நாடகாவில் விளைச்சல் பாதிப்பால் ஏற்காடு காபிகொட்டைக்கு மவுசு அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில் விலை மூட்டைக்கு  ரூ.2500 அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உலக அளவில் பிரேசிலில் தான், அதிகளவில் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. உலக வர்த்தக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 75 சதவீதம் கர்நாடகாவிலும், 20 சதவீதம் கேரளாவிலும், 5 சதவீதம் தமிழகத்திலும் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் தான் காபி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 35,600 ஹெக்டேரில் காபி பயிரிடப்படுகிறது. இதில் அராபிகா வகை பயிர் 29,338 ஹெக்டேரிலும், ரோபாஸ்டா வகை பயிர் 6,314 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக 14,450 டன் அராபிகா, 5,590 டன் ரோபாஸ்டா காபிகொட்டை விளைச்சல் கிடைக்கிறது. அந்த வகையில், ஏற்காட்டில் 5,800 ஹெக்டேர் நிலப்பரப்பில் காபி பயிர்  சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அராபிகா வகை காபி பயிர் தான், அதிகளவில்  சாகுபடி செய்யப்படுகிறது. வாசனை மற்றும் திடம் காரணமாக எப்ேபாதுமே அராபிகா காபிக்கு மவுசு அதிகமாக உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 50 கிலோ மூட்டை கொண்ட அராபிகா காபி கொட்டை ரூ.13 ஆயிரம் முதல் ரூ.13,500 என விற்பனை செய்யப்பட்டது. ஒரே மாதத்தில் மூட்டை விலை உயர்ந்துள்ளது. தற்போது மூட்டை ரூ.15,500 முதல் ரூ.16,100வரை விற்பனை செய்யப்படுகிறது. ரோபாஸ்டா வகை காபி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10,500 என விற்பனை செய்யப்படுகிறது.

நடப்பாண்டு ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் அங்கு பூ பூப்பது பாதித்தது. இதனால் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவில் விளைச்சல் கிடைக்கவில்லை. அதே வேளையில், கர்நாடகாவிலும் நடப்பாண்டு காபி விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் ஏற்காடு காபிக்கு மவுசு கூடி விலையும் அதிகரித்துள்ளதால் காபி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  

இது குறித்து ஏற்காடு காபி பயிர் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் அண்ணாமலை, பழனிசாமி ஆகியோர் கூறியதாவது: ஏற்காட்டில் 120க்கும் மேற்பட்ட காபி தோட்டங்கள் உள்ளன. இங்கு சேர்வராயன் மலைப்பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, செம்மநத்தம், காவேரிபீக், கொட்டச்சேடு, தலைச்சோலை உள்பட பல கிராமங்களில் காபி பயிர் அதிகளவில் பயிரிடப்படுகிறது. காபி ஓராண்டு பயிராகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் காபி செடி விளைவிக்கப்படும். இவை செப்டம்பர், அக்டோபரில் பூ பூக்கும். நவம்பர், டிசம்பரில் அறுவடைக்கு தயாராகும். மற்ற கால கட்டங்களில் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கும். ஏற்காட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரம் டன் காபிகொட்டை உற்பத்தியாகிறது. ஏற்காடு காபிகொட்டை ஜெர்மனி, அமெரிக்கா, ஐரேப்பியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோட்டங்களில் காபி பயிர் மட்டுமின்றி ஊடுபயிராக மிளகு, பேரிக்காய், கமலா ஆரஞ்சு மற்றும் சில்வர் ஓக் மரங்கள் பயிரிடப்படுகிறது.

ஏற்காட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கிலோ காபிகொட்டை ரூ.240 முதல் ரூ.260 வரை விற்கப்பட்டது. நடப்பாண்டு கர்நாடகாவில் காபி கொட்டை விளைச்சல் பாதித்துள்ளது. அதனால், ஏற்காடு காபி கொட்டைக்கு மவுசு கூடியுள்ளது. வியாபாரிகளின் கவனம் ஏற்காடு பக்கம் திரும்பியுள்ளது.
ஒரு மாதமாக வியாபாரிகள் ஏற்காட்டுக்கு படையெடுக்கின்றனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு, காபிக்கொட்டையை ஏலம் எடுக்கின்றனர். தேவை அதிகரிப்பால், காபிகொட்டை விலையும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் ஒரு கிலோ காபிகொட்டைக்கு ரூ.70 அதிகரித்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Karnataka , Yield impact reverberates in Karnataka; Yercaud coffee pod price hikes by Rs 2500 per bag: Farmers happy as prices rise in a single month
× RELATED கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு...