×

சாலையோர தெருக்குழாயில் குடிநீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் மோதி 3 பேர் பலி: குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் அளிக்க முதல்வர் உத்தரவு

ஆறுமுகநேரி: திருச்செந்தூர் அருகே முக்காணியில் சாலையோர குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அடுத்த பெருங்குளத்தைச் சேர்ந்த தர்மராஜின் மகன் மணிகண்டன் (27). ஏரலில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார்.

இவரது நண்பர்கள் கவரிங், சலூன், ஷாப்பிங் கடைகள் வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க காரில் மணிகண்டன், நண்பர்களான குரும்பூர் அடுத்த அங்கமங்கலத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து (23), சுரேஷ் (27), பிரவீன் (27), அருண் (30), முனீஸ்வரன் (27) ஆகிய 6 பேரும் கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு கடந்த 21ம் தேதி இரவு சென்றனர். பொருட்களை வாங்கிய பிறகு அதே காரில் இவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் மாலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை மணிகண்டன் ஓட்டி வந்தார். நேற்று காலை 6.30 மணி அளவில் முக்காணி பகுதியில் அசுர வேகத்தில் வந்த கார், தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் சாலை ஓரத்தில் அடுத்தடுத்துள்ள 2 குடிநீர் குழாய்களில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்தது. இதில், முக்காணியைச் சேர்ந்த நட்டார் சாந்தி (50), அமராவதி (58), பார்வதி (35) ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சண்முகத்தாய் (50) என்பவர் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், மணிகண்டன், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.

முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தூத்துக்குடி மாவட்டம், ஏரல் முக்காணி கிராமத்தில் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த 3 பெண்கள் கார் மோதி இறந்த துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய்க்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

* கடையில் அமர்ந்து டீ குடித்தபோது கார் மோதி 2 விவசாயிகள் பலி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகரநீர்முளை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ராஜாங்கம்(55), கோவிந்தராஜ்(50). இருவரும் நேற்று காலை 6.30 மணிக்கு நீர்முளை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோர டீக்கடைக்கு வெளியே பெஞ்சில் உட்கார்ந்து டீக்குடித்து கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு காரில் சிலர் சுற்றுலா வந்தனர்.

கேரளாவை சேர்ந்த சுஜிமன் ஓட்டி வந்த அந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து டீக்குடித்து கொண்டிருந்த ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியாகினர். இதுகுறித்து தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி பலி: வேலூர் அருகே சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 4 பேர் சென்ற கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற மாணவி இறந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

The post சாலையோர தெருக்குழாயில் குடிநீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் மோதி 3 பேர் பலி: குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் அளிக்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Arumuganeri ,Trikani ,Trichandore ,K. Stalin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில்...