×

மூணாறு, போடி பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்கல: வீடு, வாகனம், ரேஷன் கடை, தோட்டங்கள் சேதம்

மூணாறு/போடி: மூணாறு, போடி பகுதிகளில் படையப்பா உள்ளிட்ட காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடு, ரேஷன் கடைகளை அடித்து நொறுக்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மூணாறு, போடி முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட இடமாக பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும். தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. தொழிலாளர்களின் விவசாய நிலங்கள்,குடியிருப்புகள்,வாகனங்கள் மற்றும் மனிதர்களையும் தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இங்கு இரவு பகல் வித்தியாசம் இல்லாமல் சுற்றித்திரியும் யானைகளால் பொதுமக்களின் உயிருக்கும் சொத்திற்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்பகுதிகளில் சுற்றித்திரியும் படையப்பா, அரிசி கொம்பன்,கணேசன்,முறிவாலன்,ஓஸ் கொம்பன் காட்டுயானைகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது.

மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது. மூணாறில் தொழிலாளர்கள் வசிக்கும் எஸ்டேட் பகுதிகளில் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது. இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது. நேற்று முன்தினம் இரவு, பகுதியில் சின்னக்கானல் எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து விற்பனைக்கு வைத்திருந்த அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை தின்று தீர்த்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு காட்டு யானையை வனத்திற்குள் விரட்டினர். இதனால் எஸ்டேட் பகுதியில் ரேஷன் விநியோகம் தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் இங்குள்ள கன்னிமலை, நயமக்காடு, கடலார், நல்லதண்ணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு

மூணாறு எஸ்டேட் பகுதிகள் உட்பட சின்னக்கானல், பூப்பாறை, சாந்தன்பாறை போன்ற பகுதிகளில் சுற்றி திரியும் அரிசி கொம்பன் என்ற காட்டு யானை, ரேஷன் கடை, தொழிலாளர்களின் வீடு ஆகியவற்றை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது. தாக்குதல் குணம் கொண்ட யானைகள் குறித்து ஆய்வு செய்ய வந்த வனத்துறையின் சிறப்பு அதிகாரியும், தலைமை கால்நடை மருத்துவருமான டாக்டர் அருண் ஸக்கரியா, கடந்த சில நாட்களுக்கு முன் வனத்துறை தலைமை அதிகாரிகளுக்கு ஒரு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதனையடுத்து அதிக தாக்குதல் குணம் கொண்ட அரிசி கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும் வனத்துறையையும், கேரள அரசையும் கண்டித்து பூப்பாறையில் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 23 நாட்களாக நடந்து வந்தது. அரிசி கொம்பன் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்ற உத்தரவு வந்ததையடுத்து, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.டி.அர்ஜூனன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

வீடுகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்
தேனி மாவட்டம், போடிமெட்டில் இருந்து 5வது கிலோ மீட்டரில் உள்ள தோண்டி மலையில் உள்ள ஏலத் தோட்டத்திற்குள் நேற்று அரிசி கொம்பன் யானை புகுந்தது. அப்பகுதியில் உள்ள 2 வீடுகளை சேதப்படுத்தியது. இதில், வீட்டின் சுவர்களை இடித்து மேற்கூரை தகரங்களை இழுத்து கீழே தள்ளி தரைமட்டமாக்கியது. இதனை கண்டதும், வீட்டில் இருந்தவர்கள் அலறியபடி தப்பி ஓடினர். தகவலறிந்து வந்த தேவிகுளம் ஊராட்சி தலைவர் ஜெயின், சாந்தாம்பாறை ஊராட்சி தலைவர் ஜெபஸ்டியன், விவசாய சங்கத்தினர் கனகராஜ், முருகன் உள்ளிட்டோர் அப்பகுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வீடு இழந்தவர்களுக்கு இழப்பீடு வாங்கித் தரப்படும் என உறுதியளித்தனர்.

Tags : Munnar ,Bodi , Wild elephants rampage in Munnar, Bodi areas: damage to houses, vehicles, ration shops, gardens
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு