பாசன தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரம் நீர்மட்டம் கொண்டது. இந்த அணையின் நீரை நம்பி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 50,000 ஏக்கர் பரப்பளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.தற்போது அணையின் நீர்மட்டம் 118.65 அடியாக உள்ள நிலையில் இந்தாண்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதற்காக, வாணாபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

அப்போது விவசாயிகள், மார்ச் 2ம் தேதிக்குள் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகு, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மார்ச் 7ம் தேதிக்குள் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இதுவரையில் தண்ணீர் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், நெல் நடவுக்காக நாற்றுவிட்டுள்ள விவசாயிகள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எனவே, பாசன தேவை கருதி விரைவில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: