×

பழநி பகுதியில் குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்வது அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழநி: பழநி பகுதியில் குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்வது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. கடந்த வருடம் பெய்த மழையின் காரணமாக பழநி பகுதியிலுள்ள குளங்கள் நிரம்பி இருந்தன. இக்குளங்களில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு செய்யப்பட்டதால் பல குளங்களின் நீர்பிடிப்பு பகுதி சுருங்கி காணப்படுகிறது.

இதனை எதிர்பார்த்து காத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் குளங்களின் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்ய துவங்கி உள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரத்தில் உள்ள மந்தைக்குளத்தில் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்பிடிப்பு பகுதி நீரின்றி நிலமாக உள்ளது. அந்நிலத்தில் தற்போது குறுகிய கால பயிர்களான தட்டை, உளுந்து, நிலக்கடலை, வெள்ளரி போன்றவை பயிரிடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. எனவே பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தி மந்தைகுளத்தின் நீர்பிடிப்பு பகுதியை காக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pharani , Increasing Encroachment of Ponds in Palani Area: Will Action Be Taken?
× RELATED நெருங்குது சீசன் பழநி வழித்தடத்தில்...