×

கலசபாக்கம் அருகே வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் ரூ.70 லட்சத்தில் திருப்பணிகள்: விரைவில் தொடங்குகிறது

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயிலில் ரூ.70 லட்சம் மதிப்பில் விரைவில் திருப்பணிகள் தொடங்க உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்கள் செய்யாற்றின் கரையோரம் அமைந்துள்ளன. மிருகண்டா அணை, ஆன்மிக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் பிரசித்தி பெற்ற பர்வதமலை, நட்சத்திரகிரி  மலை மீதுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சப்த கரை கண்டங்கள், சப்த கைலாயங்கள் ஆகியன கலசபாக்கம் ஒன்றியத்தின் அடையாளமாகும்.

இதில், கலசபாக்கம் அடுத்த காந்தப்பாளையம் ஊராட்சியில், 15ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரால் கட்டப்பட்ட கருவுடை நாயகி சமேத வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அரியவகை சிற்பங்கள் உள்ளன. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயில் பல ஆண்டுகளாக சிதலமடைந்துள்ளது. எனவே, இக்கோயிலில் திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய வேண்டுமென கிராம மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கலைஞர் முதல்வராக இருந்தபோது இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள அப்போதைய கலெக்டர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரிடம் தொகுதி மக்கள் சார்பில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கோரிக்கை வைத்ததின்பேரில் இந்து சமய அறநிலைத்துறை மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணி மதிப்பீடு தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜகோபுரம், திருமண மண்டபம், திருத்தேர் அமைக்கப்படுமா? கலசபாக்கம் ஒன்றியம், கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் கரை கண்டேஸ்வரர் கோயிலுக்கு ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எலத்தூர் மோட்டூர் பகுதியில் நட்சத்திரகிரி மலை மீதுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.2.20 லட்சம் மதிப்பில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் பிரசித்தி பெற்ற பர்வத மலையில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆன்மிக பணிகள் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நட்சத்திரகிரி மலை மீது அமைந்துள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் பர்வதமலை அடிவாரத்தில் திருமண மண்டபம் அமைக்க வேண்டும். கோயில்மாதிமங்கலம் கண்டேஸ்வரர் கோயிலுக்கு ராஜகோபுரம், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோயிலுக்கு திருத்தேர் ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellanthankeeswarar temple ,Kalasapakkam , Repair work on Vellanthankeeswarar temple near Kalasapakkam at a cost of Rs 70 lakh: Starts soon
× RELATED கலசபாக்கம், சேத்துப்பட்டு அருகே அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்