×

பயனற்ற ஆடம்பரங்களை தவிர்த்து புத்தகம், அறக்கட்டளைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்குங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: பயனற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, தேவையானோருக்கு உதவிடும் வகையில்  புத்தகங்களையும், அறக்கட்டளைக்கான நிதியுதவியையும், மகளிர் சுய உதவிக்  குழுத் தயாரிப்புகளையும் மட்டுமே அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இளைஞர் அணி செயலாளராக திமுக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன்.

அதேவேளையில், என்னை வரவேற்று ப்ளக்ஸ் பேனர், பட்டாசு வெடிப்பது, வெள்ளிச் செங்கோல்-வாள் போன்ற நினைவுப் பரிசாக வழங்குவது போன்ற நடைமுறை தொடர்கிறது. இவற்றைத் தவிர்க்கும்படி கேட்டும், இவை தொடர்வது வருத்தமளிக்கிறது. தலைவரின் 70வது பிறந்தநாளையொட்டி என்னுடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நான் முன்னெடுத்துள்ள நடமாடும் ‘கலைஞர் நூலகத்தில் உள்ள 4 ஆயிரம் புத்தகங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியவை. மேலும், ‘ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு வழங்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வழங்குங்கள்’ என்று நான் கேட்டுக்கொண்டபடி நீங்கள் வழங்கிய அந்தப் பொருட்களை சென்னையைச் சுற்றியுள்ள பல இல்லங்களுக்கு அளித்து மகிழ்ந்தேன்.

அதேபோல், பலரும் என்னிடம் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்கள். அப்படிக் கடந்த ஒரு மாதத்தில், நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.13.75 லட்சத்தை வழங்கியுள்ளோம். இந்தப் பணியைத் தமிழ்நாடு முழுவதும் தொடரவுள்ளோம். ஆகவே நீங்கள் என் மீதான அன்பை, இளைஞர் அணி அறக்கட்டளைக்கான நிதியுதவியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நீங்கள் வழங்கும் ஒரு சிறுதொகை எங்கோ ஒரு மூலையில் உதவியை எதிர்நோக்கி இருக்கும் எளியோருக்கான வாழ்வாக அமையும், வறுமைப் பின்னணியில் வாழ்வை வெல்லத் துடிக்கும் மாணவச் செல்வங்களின் கல்வி காக்க உதவலாம்.

நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கும் ஒரு புத்தகம் ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள  குழந்தைக்கு அறிவின் திறவுகோலாக இருக்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுத் தயாரிப்புகளை, தயாரிப்பவர்-பயன்படுத்துவோர் என இருதரப்புக்கும் பலனளிக்கும். எனவே,  உடன்பிறப்புகளாகிய நீங்கள், பயனற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, தேவையானோருக்கு உதவிடும் வகையில் புத்தகங்களையும், அறக்கட்டளைக்கான நிதியுதவியையும், மகளிர் சுய உதவிக் குழுத் தயாரிப்புகளையும் மட்டுமே அன்பளிப்பாக வழங்கிடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Minister ,Udayanidhi Stalin , Avoid useless luxuries, donate funds to book, charity: Minister Udayanidhi Stalin appeals
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...