திருமலை: ஆந்திராவில் எம்எல்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஆட்டோவில் இருந்து ரூ.500 நோட்டுகள் சாலையில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நரசன்னப்பேட்டை அடுத்த மடபம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த டோல்கேட் வழியாக சென்ற ஆட்டோவில் இருந்து ரூ.500 நோட்டுகள் காற்றில் பறந்து சாலையில் விழுந்தது. ஆட்டோவில் இருந்து பணம் கீழே விழுந்தாலும், அதில் இருந்தவர்கள் ஆட்டோவை நிறுத்தாமலும், பணம் எடுக்க முயற்சி செய்யாமல் வேகமாக ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளனர்.
சாலையில் விழுந்த பணத்தை டோல்கேட் ஊழியர்கள் எடுத்து நரசன்னப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த வீடியோ அனைத்தும் டோல்கேட் அருகே அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சாலையில் இருந்த ரூ.88 ஆயிரம் ரொக்கம் தங்கள் வசம் உள்ளது. யாரேனும், உரிய சான்றுகளுடன் வந்தால் பணம் திரும்ப வழங்கப்படும். மாநிலம் முழுவதும் எம்எல்சி தேர்தல் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. தேர்தலுக்கு வாக்குகளை பெற ஆட்டோவில் பணம் கொண்டு செல்லப்பட்டதா? என சந்தேகம் எழுந்துள்ளது’ என்றனர்.