×

கோடம்பாக்கம், அண்ணாசாலை பகுதிகளில் கஞ்சா விற்ற மாணவர்கள் உட்பட 8 பேர் சிக்கினர்: 30 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சூளைமேடு சுபேதார் கார்டன் அருகே சிலர் பைக்குகளில் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக கோடம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் சூளைமேடு சுபேதார் கார்டன் பகுதியில் போலீசார் கண்காணித்த போது, 3 நபர்கள் பைக்குகளில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது, கோடம்பாக்கம் சுபேதார் கார்டன் 7வது பிளாக் பகுதியை சேர்ந்த அம்பேத்கர்(23), கோடம்பாக்கம் மூப்பன் மேஸ்திரி 1வது தெருவை சேர்ந்த சூர்யபிரகாஷ்(20), சூளைமேடு பகுதியை சேர்ந்த மோகன்(25) என தெரியவந்தது. இவர்கள், பைக்குகளில் கஞ்சா வைத்து கொண்டு அப்பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் 1 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சென்னை அண்ணாசாலை பார்டர் தோட்டம் செல்லப்பிள்ளையார் கோயில் மாநகராட்சி பூங்கா அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைதொடர்ந்து அண்ணாசாலை போலீசார் அப்பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பெண் உட்பட 4 பேர் சுற்றி வந்தது தெரியவந்தது. உடனே அவர்களை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் வைத்திருந்த பையில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அந்த பெண் உட்பட 4 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, சூளை அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி உஷா (எ) பானுமதி (40), அண்ணாசாலை எல்.ஜி.என்.சாலையை சேர்ந்த பைக் மெக்கானிக் முகமது அப்துல்லா (24), மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஏ படித்து வரும் ஓட்டேரி கிருஷ்ணாதாஸ் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (20), புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் 7வது  தெருவை சேர்ந்த தனியார் கல்லூரியில் பிசிஏ 2ம் ஆண்டு படித்து வரும் மைக்கேல் பேக்கர் (21) என தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவன் உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா ரூ.9,640, ஐந்து செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.                                              


* 2 கிலோ கஞ்சா பறிமுதல் எண்ணூர், பெரியகுப்பம் பகுதியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எண்ணூர்  போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று 2 இளைஞர்கள் பைக்கில் வைத்து பெரியகுப்பத்தில் கஞ்சா விற்பனை செய்ய வந்துள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள், இங்கு கஞ்சா விற்கக் கூடாது என்று கூறி வெளியேறுமாறு இருவரையும் எச்சரித்துள்ளனர். ஆனால் அதற்கு அந்த வாலிபர்கள் பொதுமக்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து எண்ணூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (எ) பாஷா (23), மோகன் (24) என்பதும், இருவரும் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலங்களாக விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



Tags : Gotambakkam ,Palanasal , 8 people including students caught selling ganja in Kodambakkam, Annasalai areas: 30 kg of ganja seized
× RELATED கோடம்பாக்கம் வள்ளியம்மாள்...