×

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அலெக்ஸ் மினார் அசத்தல்

அகாபல்கோ: அபியர்டோ மெக்சிகனோ ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் சாம்பியன் பட்டம் வென்றார்.
பைனலில் அமெரிக்காவின் டாமி பவுல் (25 வயது, 23வது ரேங்க்) உடன் மோதிய அலெக்ஸ் மினார் (24 வயது, 22வது ரேங்க்) 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அலெக்ஸ் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. அதே வேகத்துடன் 3வது மற்றும் கடைசி செட்டில் புள்ளிகளைக் குவித்த அவர் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி, 27 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார்.ஏடிபி 500 அந்தஸ்து தொடரில் அலெக்ஸ் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.


* துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் மெட்வதேவ் சாம்பியன்

துபாய்: ஏடிபி டென்னிஸ் துபாய் டூட்டி பிரீ தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் சக வீரர் ஆந்த்ரே ருப்லேவுடன் (25 வயது, 6வது ரேங்க்) மோதிய மெட்வதேவ் (27 வயது, 7வது ரேங்க்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி, 1 மணி, 8 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.துபாய் தொடரின் அரையிறுதியில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைத்த மெட்வதேவ், நடப்பு சீசனில், கடின தரை மைதானங்களில் நடந்த 3 தொடர்களில் தொடர்ச்சியாக பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் அவர் ரோட்டர்டாம் மற்றும் தோஹாவில் நடந்த போட்டிகளில் சாம்பியனாகி இருந்தார்.




Tags : Mexico Open Tennis ,Alex Minar , Mexico Open Tennis Alex Minar is awesome
× RELATED உலக கோப்பையில் ரோகித், கோஹ்லி ஆடுவது...