×

கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால் படகுகள் விடுவிப்பு: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு

காரைக்கால்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், கார்த்தி, செல்வமணி உள்ளிட்ட 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களின் விசைப்படகு மற்றும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்நிகழ்வில் மீனவர்களின் விசை படகையும் பறிமுதல் செய்து மீனவர்களை இலங்கை திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்த புலவேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 9 மீனவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நள்ளிரவு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்று இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி விசைப்படகையும் 9 மீனவர்களையும் கைது செய்யப்பட்டு பின்னர் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த இரண்டு வழக்குகளும் திரிகோணமலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 28ம் தேதி நடைபெற்ற இறுதி கட்ட தீர்ப்பு காரைக்கால் உலகநாதன் படகையும் மற்றும் நாகை புலவேந்திரன் உள்ளிட்ட இரண்டு விசை படைகளையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து விசைப்படகு உரிமையாளர்கள் இருவரும் விசைப்படகுகளை மீண்டும் தமிழகம் கொண்டு வர இலங்கை செல்ல உள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு நாகை, காரைக்கால் படகுகளை விடுவிப்பது கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல் முறை ஆகும்.

Tags : Navy ,Sri Lanka Court , Release of Nagapattinam, Karaikal boats captured by Navy: Sri Lanka court verdict
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...