×

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கும், கீழடி அருங்காட்சியகம் என்ற தொன்மை பொக்கிஷம்: காலந்தோறும் தமிழர் பெருமை பேசும் அற்புதம்!

மதுரை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை அருகே திறந்து வைக்கும் ‘கீழடி அருங்காட்சியகம்’ 2 ஏக்கர் பரப்பில் ரூ.18.43 கோடி செலவில், தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமை பேசும் வகையில் அற்புதமான பல்வேறு அம்சங்கள் பெற்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. முன்னதாக ஒன்றிய அரசின் 3 கட்ட ஆய்வும் நடத்தப்பட்டது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடிப்பரப்பளவில், ரூ.18 கோடியே 43 லட்சம் செலவில், தமிழக மரபுசார் கட்டடக்கலை அடிப்படையில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கீழடி அருங்காட்சியகத்தில் ‘மதுரையும் கீழடியும்’, ‘வேளாண்மையும் நீர்மேலாண்மையும்’, ‘கலம் செய்கோ’, ‘ஆடையும் அணிகலன்களும்’, ‘கடல்வழி வணிகம்’, ‘வாழ்வியல்’ எனும் 6 பொருண்மைகள் அடிப்படையில் தனித்தனி கட்டடங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் வகையிலும், வெளிக்கொணரும் வகையிலும், உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும், கீழடி அருங்காட்சியகம் அமையப்பெற்றுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். கீழடி அருங்காட்சியத்தில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்: தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும், கீழடியின் முக்கியத்துவத்தையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் 15 நிமிடஒளி ஒலிக்காட்சி குளிரூட்டப்பட்ட அரங்கில் காட்சிப்படுத்தப்படஉள்ளது.

வைகை ஆற்றங்கரையில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தொடுதிரையில் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்தில் பொருண்மை சார்ந்து அமைக்கப்பட்ட கட்டடங்களான, வேளாண்மை, இரும்புத் தொழில், நெசவு, மணிகள் தயாரித்தல், கடல்வழி வணிகம், மேம்பட்ட சமூகம் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றிற்கு உரிய விளக்கம் இரண்டு நிமிட உயிரூட்டுக்காட்சி (அனிமேசன்) காட்சிப்படுத்தப்படவுள்ளது. கீழடி அகழாய்வுப் பணிகள், தோற்றம், செயல்பாடுகள் ஆகியவற்றை மெய்நிகர்காட்சி (விர்ச்சுவல் ரியாலிட்டி எக்சிபிசன்) வாயிலாக தத்ரூபமாக உணர்ந்து கொள்ளும் வகையில் மெய்நிகர் காட்சிக்கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூதுபவள கற்களால் செய்யப்பட்ட மோதிரக் கல்லின் மாதிரி சுழன்று காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்ககால மக்களின் கடல்சார் வணிகத்தினை பிரதிபலிக்கும் வகையில் சங்ககால கப்பலின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் அரிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்கள், மட்பாண்டங்கள், அகழாய்வுக்குழிகள், செங்கற் கட்டுமானங்கள் போன்றவற்றின் மாதிரிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளும் மாணவர்களும் தமிழர் விளையாட்டுகளை தொடுதிரையில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அதிமுக்கியமான தொல்பொருட்கள் முப்பரிமாண வடிவில் (3 டைமன்சன்) பொதுமக்கள் உவகையுடன் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயரினை தொடுதிரையில் எழுதினால் தமிழி எழுத்தில் தங்களது பெயரைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கைச் சீமையின் மரபுசார் உணவு முறைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,President ,G.K. stalin ,tamil , Tamil Nadu Chief Minister M.K.Stalin will inaugurate the ancient treasure of Geezadi Museum today: a miracle that Tamils are proud of through time!
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?