×

புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு

சென்னை: ஆசிரியர்களுக்கான புதிய நலத்திட்டங்களை அறிவிப்புக்காக, ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழகத் தமிழாசிரியர் கழகம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றங்கள், ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் நலக்கூட்டமைப்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு இயக்கம், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு வேளாண்மைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம் ஆகிய சங்களின் நிர்வாகிகள் சந்தித்தனர்.

மேலும், அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள், உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்விச்செலவு ரூ50,000 வரை உயர்வு, அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா போன்ற திட்டங்களை அறிவித்தமைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.

இதன்பின்னர் நிருபர்களிடம் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 1ம் தேதி தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடும் பொழுது, ஆசிரியர்களுக்கென 4  பிரதான நலதிட்டங்களை அறிவித்தார். அதன்படி, இன்றைய தினம் தமிழகத்தில் இருக்கக்கூடிய 20 ஆசிரியர் அமைப்புகள் நேரடியாக முதல்வரை சந்தித்து, எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளையும், எங்களுடைய கோரிக்கையான அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு ரூ50,000 உயர்த்தி வழங்கப்படும் போன்ற 4 அறிவிப்புகளை தனது பிறந்தநாளையொட்டி அறிவித்தமைக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Announcement of new welfare schemes: Chief Minister M.K.Stalin met in person and thanks teachers' union executives
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து