சென்னை: தமிழ்நாடு அரசின், சட்டபேரவை கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, வேளாண் பட்ஜெட் தொடர்பான தனி அறிக்கையை தயார் செய்ய, தமிழகம் முழுவதும் உள்ள விவசாய கட்சிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளிடம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றன.
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன்,
மீன்வளத்துறை அரசு முதன்மை செயலர் கார்த்திக், சர்க்கரைத்துறை ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண்மைத்துறை அரசுச் செயலர் சமயமூர்த்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசுச்செயலாளர் அருண்ராய் மற்றும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தமிழ்நாடு விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள், வேளாண் வணிகர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள், அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் அரசு அலுவலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தின் வாயிலாக வேளாண் தனி நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது.
