×

பார்சன்ஸ் வேலியில் காட்டுத்தீ ஊட்டியில் 4 மணி நேரம் மின் விநியோகம் பாதிப்பு-மலை ரயில் சேவை நிறுத்தம்

ஊட்டி : பார்சன்ஸ் வேலி, கவர்னர் சோலை மற்றும் சாண்டிநள்ளா போன்ற பகுதிகளில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதால் இவ்வழித் தடத்தில் வரும் மின் கம்பிகள் சேதமடைந்தது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேல் ஊட்டி நகரில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் இறுதிவரை நான்கு மாதங்கள் உறைபனி விழும்.

இந்த சமயங்களில் வனப்பகுதியில் உள்ள புற்கள், செடி, கொடிகள் பனியில் கருகி காய்ந்து விடும். மேலும், வனங்களில் உள்ள மரங்களும் சில சமயங்களில் காய்ந்து விடும். இது போன்ற சமயங்களில் பெரிய அளவிலான காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து நாசமாகும். மேலும், சிறிய வன உயிரினங்களும் இதில் உயிரிழக்கும்.

இம்முறை கடந்த நவம்பர் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் பனி விழத் துவங்கியது. கடந்த இரு மாதங்கள் நீலகிரியில் உறைபனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்து காணப்பட்டது. தற்போது, பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் அனைத்தும் காய்ந்து போய் உள்ளது. இதனால், எளிதில் காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடித்து வந்தது. ஆங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வந்தது.

நேற்று ஊட்டி அருகே உள்ள பார்சன்ஸ் வேலி, சாண்டி நள்ளா, தீட்டுக்கல் மற்றும் கவர்னர் சோலை போன்ற பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில், பல ஏக்கர் பரப்பளவில் இருந்த செடி கொடிகள் மற்றும் முட்புதர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.ஊட்டி நகருக்கு சாண்டி நல்லா மற்றும் அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் கம்பிகள் வரும் வழியில் காட்டுத்தீ ஏற்பட்டதால், பல இடங்களில் மின் கம்பிகள் சேதமடைந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், நேற்று காலை 12 மணி முதல் 4 மணி வரை ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நான்கு மணிக்கு மேல் மருத்துவமனை பகுதிக்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.

மேலும், ஊட்டி அருகே உள்ள வேலிவியூ மற்றும் கேத்தி மலைப்பகுதிகளில் காட்டுத் தீ  ஏற்பட்டதால், ஊட்டி குன்னூர் இடையே மலை ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. காட்டுத் தீ கட்டுக்குள் வந்த பின்னரே இவ்வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கப்பட்டது.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கடும் வெயிலும் நீடிப்பதால் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. இதனால், அனைத்து அரசு துறை அதிகாரிகளையும் உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 பந்தலூரில் வனப்பகுதி எரிந்து நாசம்

கூடலூர், பந்தலூர் பகுதியில் இரவு முழுவதும் கடும் பனி பொழிவும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் வாட்டி வருவதால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு தாவரங்கள் கருகி போய் காணப்படுகிறது. வறட்சி காரணமாக பல்வேறு இடங்களில் சில சமூக விரோதிகள் வனப்பகுதியில் தீ வைத்து விடுகின்றனர். இதனால், அரிய வகை மூலிகை தாவரங்கள், மரம், செடி, கொடிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமாகி வருகிறது.

வனத்துறை சார்பில் வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும் வனங்களில் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட எலியாஸ் கடை அருகே உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதமானது.

சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை கூறுகையில்,``வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தீவைப்பவர்கள் குறித்து தெரியவந்தால் வனச்சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள்’’ என்றனர்.

Tags : Parsons Fence ,Mountain , Ooty: Due to forest fire in areas like Parsons Valley, Governor's Oasis and Sandinalla yesterday, power lines on this route
× RELATED ஏற்காடு 11-வது கொண்டை ஊசி...