நாமக்கல்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து (03.03.2023) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 2010ம் ஆண்டு துவக்கிய திட்டம் என்பதற்காக இத்திட்டமானது நிறுத்தப்பட்டு யாருக்கும் உபயோகம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. வட்டி மட்டுமே இந்த திட்டத்திற்கு ரூ.1,250 கோடி கடந்த ஆட்சிக்காலத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.1,250 கோடி ஆனால், இந்த திட்டத்திற்கு செலுத்தியுள்ள வட்டி ரூ.1,250 கோடி, இதனால் ரூ.2,500 கோடி யாருக்கும் உபயோகம் இல்லமால் செலவாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு அமைந்தவுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் விரைவில் மோகனூரில் உள்ள சர்க்கரை ஆலையில் இணை மின் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசானது மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
