×

அண்ணாநகர் நியூ ஆவடி சாலையின் நடைபாதையில் கட்டப்பட்ட 70 கடைகள் அதிரடி அகற்றம்; அதிகாரிகள் நடவடிக்கை

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மண்டலத்தில் பல இடங்களில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு துணி, செருப்பு, காய்கறி, பழம், பூக்கள், சலூன், இரும்பு மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், இப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகளையும் ஆக்கிரமித்து பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாதசாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

வாகன ஓட்டிகள் பலரும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி பொருள்களை வாங்குவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தி பாதசாரிகள் நடப்பதற்கு வழி செய்ய வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளிடம்  பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றும்படி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில்,  முதற்கட்டமாக அண்ணாநகர் நியூ ஆவடி சாலை நடைபாதையை  ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகளை அண்ணாநகர் மண்டல உதவி செயற்பொறியாளர் குகன் மற்றும் உதவி பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் ஊழியர்கள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,  ‘‘மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில்  மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Annanagar New Avadi Road , 70 shops built on the footpath of Annanagar New Avadi Road will be removed; Officers action
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...