மேகாலயாவில் பாஜ ஆதரவுடன் புதிய முதல்வராக சங்மா வரும் 7ம் தேதி பதவியேற்பு

ஷில்லாங்: மேகாலயாவில் பாஜ ஆதரவுடன் புதிய முதல்வராக கான்ராட் கே சங்மா வரும் 7ம் தேதி பதவியேற்க திட்டமிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் திரிபுரா, நாகலாந்து இரு மாநிலத்திலும் பாஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜ கூட்டணி முறிந்து தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், 60 சட்டப்பேரவை தொகுதிகளில் என்பிபி கட்சி 26 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தலா 5 இடங்களை கைப்பற்றின. பாஜ, எச்எஸ்பிடிபி, பிடிஎப் கட்சிகள் தலா 2 இடங்களில் வென்றன.

எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காததால், என்பிபி கட்சி, பாஜ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கேட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் என்பிபி கட்சி ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் கான்ராட் கே சங்மா நேற்று ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இது குறித்து மாநில பாஜ தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி கூறுகையில், ‘‘என்பிபி கட்சிக்கு பாஜ உட்பட 34 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சங்மா தலைமையில் வரும் 7ம் தேதி புதிய அரசு பதவியேற்கும். அவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வார்’’ என்றார்.

* தேர்தலுக்கு பின் வன்முறையில் ஒருவர் பலி

மேகாலயாவில் சட்டமன்ற தேர்தல் முடிவால் அதிருப்தி அடைந்த சிலர் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். மரியாங் சட்டமன்ற தொகுதி, ஷெல்லா, மோகைய்யாவ் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கு சிலர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வன்முறை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: