லஞ்சம், ஊழல் புற்றுநோய் போல் பரவி உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

புதுடெல்லி: லஞ்சம், ஊழல் புற்றுநோய் போல் பரவி உள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். சட்டீஸ்கரில் பாஜ ஆட்சியின் போது முதல்வராக இருந்தவர் ராமன் சிங். இவர் ஆட்சியில் முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த அமன்சிங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக கடந்த 2020ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இருவர் மீதும் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கடந்த ஆண்டு சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தகவல் உரிமை ஆர்வலர் உச்சித் சர்மா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரா பட் மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதிகள் கூறுகையில்,‘‘மனிதனின் பண ஆசையால்தான் ஊழல் தற்போது புற்றுநோய் போல் பரவி உள்ளது. ஊழல் என்பது மோசமான ஒரு நோய். அது நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இடம் பெற்று வருகிறது. நிர்வாகத்தில் மட்டுமில்லாமல் அனைத்து துறையிலும் லஞ்சம் பரவி கிடக்கிறது என பொறுப்புள்ள நாட்டின் குடிமகன்கள் பலர் சொல்கின்றனர். எனவே,ஊழல் போன்ற குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் நீதிமன்றங்கள் கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை காட்டக்கூடாது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: