×

களக்காடு பகுதியில் தொடர் அட்டகாசம்; அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களை நாசம் செய்த காட்டு பன்றிகள்: விவசாயிகள் கவலை

களக்காடு: களக்காடு அருகே காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் ஒரு ஏக்கர் நெல் பயிர்கள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். களக்காடு, திருக்குறுங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிக்குள் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனத்திற்குள் செல்லாமல், மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும், இவைகள் இரவில் உணவுக்காக விளை நிலங்களுக்குள் நுழைந்து நெல், வாழை, உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்வதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் களக்காடு அருகே மஞ்சுவிளை மலையடிவாரத்தில் உள்ள பாழம்பத்து விளைநிலங்களுக்குள் நேற்று இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் புகுந்தது. இதைக்கண்ட விவசாயிகள் அவைகளை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் பன்றிகள் நாலா புறங்களில் இருந்தும் படையெடுத்து வந்ததால் விவசாயிகள் விரட்ட முடியாமல் தினறினர். அதற்குள் காட்டுபன்றிகள் மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த ராமசாமி மகன் முருகன் (41) என்பவருக்கு சொந்தமான வயலில் நுழைந்து ஒரு ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை நாசம் செய்தது.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெல் பயிர்களை பன்றிகள் துவம்சம் செய்ததால் அவருக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. காட்டுபன்றிகள் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.



Tags : Khalakasam , Continuity of violence in Kalakadu area; Feral pigs destroy paddy crop ready for harvest: Farmers worried
× RELATED களக்காடு அருகே கரடிகளை தொடர்ந்து ஒற்றை யானை அட்டகாசம்