×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்?.. பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி ஏன்? என்பது குறித்து   பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தற்போது ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, டிடிவி தினகரன் அணி என்று 4 பிரிவாக இருந்து வருகிறது. தென்மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் எல்லாரும் ஓபிஎஸ், சசிகலா,
டி.டி.வி. பின்னால் இருக்கிறார்கள். வடமாவட்டம், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர் மட்டும் தான் எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் மேற்கு மாவட்டம் என்பதால் நாம் நின்றே ஆக வேண்டும்.

கவுண்டர்களின் வாக்குகள் 10 சதவீதம் இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை வாங்கினால் போதும் என்று எடப்பாடி நினைத்தார். அதனால், இடைத்தேர்தலில் கண்டிப்பாக நிற்க வேண்டும் என்ற நிலைக்கு எடப்பாடி வந்தார். மேற்கு மாவட்டம் என்பதால் ஓபிஎஸ் நிற்க மாட்டார் என்று பாஜ தலைவர் அண்ணாமலை நினைத்தார். ஆனால், ஓபிஎஸ் முதலியார் வேட்பாளரை நிறுத்தி அதில் கணிசமான வாக்குகளை பெறலாம் என்று நினைத்தார். இதற்காக முதலியார் சங்கத்திடமும் ஓபிஎஸ் பேசினார். முதலியாரை நிறுத்த போகிறார் என்று தெரிந்தவுடன் பாஜக பின்வாங்கியது.

கண்டிப்பாக ஓட்டுகள் இரண்டாக பிரியும். இரண்டு பேரும் ஒன்று சேருங்கள் என்று பாஜக கூறியது. இதற்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், பஞ்சாயத்து தொடர்ந்தது. இரண்டு பேரும் வேட்பாளரை நிறுத்த போறோம் என்று ஆதரவு கேட்டார்கள். மேற்கு மண்டலத்தில் குறிப்பாக அண்ணாமலையும், எடப்பாடியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால், 2 பேரையும் மூத்த தலைவர்கள் பஞ்சாயத்து செய்து, இரண்டு பேரும் தேர்தலில் ஒற்றுமையாக இருங்கள் என்று கூறினர். இதனால், அண்ணாமலை எடப்பாடி பக்கம் சாய ஆரம்பித்தார். இது ஓபிஎஸ்க்கு தெரியவந்தது.

இதனால் அவர் கடுப்பானார். ஓபிஎஸ் அணியில் உள்ள ஜே.சி.டி.பிரபாகர் நீங்கள் எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக எங்கள் தொண்டர்கள் கருதுகின்றனர் என்று தலைவர்கள் மத்தியில் தெரிவித்து விட்டார். இதை தொடர்ந்து அண்ணாமலை பின்வாங்கினார். இந்த இழுபறி பஞ்சாயத்துக்கு மத்தியில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி அணிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. மூத்த தலைவரான கே.வி.ராமலிங்கம் ஈரோடு மேற்கு தொகுதியில் அமைச்சர் முத்துசாமியிடம் தோற்றவர். அவரை நிறுத்தலாம் என்று பார்த்தனர். ஏற்கனவே, அதிமுக உடைந்து விட்டது. இரட்டை இலைக்கு ஓபிஎஸ் உரிமை கேட்கிறார்.

இதனால், இரட்டை இலையை முடக்கி விடுவார்கள். இரட்டை இலையை முடக்கினால் டெபாசிட் போய் விடும். தோற்றால் கேவலமாக போய் விடும் என்று கே.வி.ராமலிங்கம் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று கூறிவிட்டார். தென்னரசு 2 முறை எம்எல்ஏ ஆனவர்.தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதனால், தான் அவருக்கு கடந்த முறை சீட் வழங்கவில்லை. உள்ளூர் தலைவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். வேற வழியே இல்லாததால் எதிர்ப்பு இருக்கும் வேட்பாளரை தேர்வு செய்தார்கள். இதுவும் அதிமுகவுக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்தியது.

பாஜ மோதல் ஒரு பக்கம், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மோதல்  ஒருபுறம் பக்கம், கடைசியில் வேட்பாளர் கிடைக்காதது ஒரு பிரச்னை, இரட்டை இலை கிடைக்காது என்ற பிரச்னை, தொண்டர்கள் சோர்வு ஒரு பிரச்னை என்று எடப்பாடியால் ஒன்றும் பண்ண முடியவில்லை. அதே நேரத்தில் நின்றே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக எடப்பாடி இருந்தார். இப்படி அதிமுகவில் எல்லா மட்டத்திலும் அவருக்கு எதிர்ப்பு. தொட்டது எல்லாம் சறுக்கிட்டு தான் போனது. இந்த நிலையில் தான் வேட்பாளரை அறிவித்து, கோர்ட் மூலமாக தான் இரட்டை இலையே வாங்கினார். அது தற்காலிக வெற்றியாக இருந்தாலும் கூட, இரட்டை இலை கிடைத்ததையே ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல எடப்பாடி கருதினார்.

களம் நிலவரம் ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்கும். இந்த ஆட்சியை பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு ஆதரவான நிலை தான் இருந்தது. அதனால், பெரிய அளவில் எடப்பாடியால் ஒன்னும் பண்ண முடியவில்லை. கூட்டணி பிரச்னை, வேட்பாளர் பிரச்னை உள்பட எல்லாம் பிரச்னை. கடைசியில்  எடப்பாடிக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தார். இரட்டை இலைக்காக தான் அண்ணாமலை ஆதரவு தேவைப்பட்டது. இரட்டை இலை கிடைத்ததால் அண்ணாமலையை கழற்றி விடலாம் என்று பார்த்தார். அதே நேரத்தில் அண்ணாமலை பிரசாரத்திற்கு வருவதாக அறிவித்தார்.

அங்கு 40 சதவீதம் சிறுபான்மையினர் இருக்கிறார்கள். அதனால் பாஜவினர் யாரும் பிரசாரத்திற்கு வர வேண்டாம். பாஜக கொடியை பயன்படுத்த வேண்டாம் என்று அதிமுக சார்பில் அறிவித்தார்கள். இது பாஜகவுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. இதனால், அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் எடப்பாடி திருந்துவார் என்று பாஜக கருதியது. இப்படி எல்லா பக்கமும் எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவருக்கு ஆதரவாக இருந்தது வாசன் மட்டும் தான். அவருக்கு அங்கு வாக்கு வங்கி என்பது சுத்தமாக இல்லை. இருந்தபோதிலும் எடப்பாடிக்கு இருந்த ஒரே நம்பிக்கை பணத்தை வைத்து தேர்தலில் நின்று விடலாம் என்று நினைத்தார்.

இதற்காக வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், ஆர்.உதயகுமார் இவர்களை அழைத்து பணம் செலவு பண்ணுங்கள் என்றார். வருமான வரித்துறை பிரச்னை, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு இருப்பதால் எங்களால் ஒன்னும் பண்ண முடியாது என்று கைவிரித்து விட்டார்கள். அதனால், அவர் தான் மொத்த பணத்தையும் இறக்கினார். எடப்பாடியின் சகலை ஈரோட்டில் இருக்கிறார். அவர் மூலமாக ரூ.50 கோடி வரை செலவு செய்தார்கள். அப்படியிருந்தும் தோல்வியை சந்தித்தனர். எடப்பாடியின் பிடிவாதம் தான் தோல்விக்கு காரணம் என்று அதிமுக தொண்டர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள். தோல்வியால் தொண்டர்களும் எடப்பாடிக்கு எதிரான மனநிலைக்கு மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags : Erode East , Why did the AIADMK lose badly in the Erode East by-election?.. Sensational information
× RELATED திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும்...