திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி முருகன் கோயிலில் இன்று காலை தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை வழிபட்டு தரிசித்தனர். திருப்போரூர் கந்தசுவாமி முருகன் கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதற்காக நேற்றிரவு தேர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு தயார்நிலையில் இருந்தது.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தேரின் நான்கு சக்கரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு பச்சைக்கொடி காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபடி, 4 மாட வீதிகளிலும் அரோகரா கோஷத்துடன் வலம் வந்தனர். இதனால் 4 மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு மோர், தண்ணீர் பாட்டில், ரஸ்னா, குளிர்பானங்கள், புளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரிஞ்சி, பானகம் போன்றவை அன்னதானமாக வழங்கப்பட்டது.
தேர் இழுத்துச் செல்லப்பட்ட 4 மாடவீதிகளிலும் பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட்டனர். திருப்போரூர் முருகன் கோயிலில் இன்று தேரோட்டத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எஸ்பி பிரதீப், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், எம்எல்ஏக்கள் திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, மதுராந்தகம் மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன், பேரூராட்சித் தலைவர் மு.தேவராஜ் உள்பட பலர் பங்கேற்று தேரில் வலம் வந்த முருகனை வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிகளில் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் சக்திகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் வெற்றிவேல்முருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஆங்காங்கே நடமாடும் கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், டேங்கர் லாரி மூலமாக 4 மாடவீதிகளிலும் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தப்படுத்தும் பணியும் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இத்தேரோட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாலை 3 மணியளவில் தேர் நிலைக்கு வந்தடைந்தது.
