தொழில் பயிற்சி முடித்த பெண் கைதிகளுக்கு சான்றிதழ்: சிறை துறை டிஜிபி வழங்கினார்

புழல்: தொழில் பயிற்சி முடித்த பெண் கைதிகளுக்கு சான்றிதழ்களை சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி வழங்கினார். புழல் பெண்கள் சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில், தொழில் பயிற்சிகள் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டது. இதில், வயர் நாற்காலி, கூடை பின்னுதல், கட்டில் பின்னுதல், மெழுகுவர்த்தி மற்றும் மிதியடி தயாரித்தல் போன்ற பயிற்சி ஒரு மாதம் நடந்தது.

இதில் கலந்துகொண்டு பயிற்சி முடித்த 31 பெண் கைதிகளுக்கு தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி நேற்று சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை சரக சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன், தலைமை இடத்து சிறைத்துறை துணைத் தலைவர் கனகராஜ், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பயிற்சி மையத்தின் இணை இயக்குனர் ரவி, உதவி இயக்குனர் வில்சன், சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ், தனியார் தொண்டு நிறுவனர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: