சென்னை: துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு செய்த காலதாமதத்தினால் அதிகாரி பாதிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட பதிவாளராக பணியாற்றிய காசி.வெங்கடேசன் 2009ம் ஆண்டு ஜனவரி 31ல் ஓய்வு பெற இருந்தார். இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில், அவரை 2008ம் ஆண்டு டிசம்பர் 4ந்தேதி பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளரிடம் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 1987 முதல் 1997 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் மீது 10 ஆண்டுகளுக்கு பின்னர் காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்தும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என் தந்தை ஓய்வு பெற்ற பின்னர், என் மனைவியின் பெயரில் தொழில் தொடங்கியுள்ளார். அதை முறையாக அரசுக்கு தெரிவித்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாலா டெய்சி ஆஜராகி, மனுதாரர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை சட்டப்படி அரசு தான் நிரூபிக்க வேண்டும். அதை செய்யவில்லை. அரசு ஊழியரின் குடும்பத்தினர், தங்களது சொந்த வருமானத்தில் தொழில் செய்யும்போது அதை உயர் அதிகாரிக்கு தெரியப்படுத்தத் தேவை இல்லை என்று பணி விதி கூறுகிறது. எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்தது தவறு என்று வாதிட்டார். அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மிகவும் காலதாமதமாக மேற்கொண்டதற்கான காரணத்தை அரசு தரப்பு தெரிவிக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு காலதாமதமாக எடுக்கப்படும் நடவடிக்கையால் மனுதாரருக்கு ஏற்படும் மன உளைச்சல் அவருக்கு தரப்படும் தண்டனையைவிட மிகப்பெரிய தண்டனையாகிவிட்டது. அரசு துறை செய்யும் காலதாமதத்தால் மனுதாரர் பாதிக்கப்படக்கூடாது. எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து ஓய்வூதிய பண பலன்களையும் 8 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
