×

சென்னேரி கிராமத்தில் இருளர் பாராட்டு விழாவில் ஆளுநர் பங்கேற்பு: திருப்போரூரில் போலீஸ் பாதுகாப்பு

திருப்போரூர்: சென்னேரி கிராமத்தில், இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேருக்கு, ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியதால், அவர்களுக்கு கவுரவிப்பதற்காக  நடந்த பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது, திருப்போரூரில் பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. செங்கல்பட்டை அடுத்துள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்த இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த மாசிசடையன், வடிவேல், பெருமாள் ஆகியோருக்கு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர்களுக்கு சென்னேரி கிராம மக்கள் சார்பில், நேற்று காலை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஓஎம்ஆர் சாலை வழியாக சென்னேரி சென்றார்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் மார்க்சிய தத்துவத்தால் இந்தியா சீரழிக்கப்பட்டதாக சர்ச்சையான கருத்தொன்றை ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். இதற்கு, மா.கம்யூ, இ.கம்யூ கட்சிகள் எதிர்ப்பு தொிவித்து, ஆளுநர் எங்கு சென்றாலும் கருப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில், திருப்போரூர் பகுதியில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்படலாம் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில், மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் கருப்புக்கொடி காட்ட முன்வரவில்லை. இதையடுத்து, போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Tags : Governor ,Irular Appreciation Ceremony ,Senneri Village ,Tirupporur , Governor participates in Irular Appreciation Ceremony at Senneri Village: Police security in Tirupporur
× RELATED யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: ஆளுநர் ரவி