×

இடைத்தேர்தலில் பலத்துடன் போட்டியிட வேண்டியது அவசியம்!: அதிமுக ஒன்று சேராததே தோல்விக்கு காரணம்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடல்..!!

சென்னை: அதிமுக ஒன்றுசேராததே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானது. இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளதால் இளங்கோவன் வெற்றி உறுதியானது. இன்னும் 3 சுற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ள நிலையில் 55,534 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகள்படி 91,066 வாக்குகள் பெற்று இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். பாஜக - அதிமுக கூட்டணி தோல்வியடைந்தது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக ஒன்றுசேராததே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும், யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பிரச்னை எழுந்தது. கட்சி சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சையாக போட்டியிட வேண்டுமா என்பதிலும் குழப்பம் நிலவியது. பிரச்சனையும், குழப்பமும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என கருத்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை சூசக எதிர்ப்பு:

இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. பிரிந்து நிற்பதோ அல்லது இருவர் போட்டியிடுவதோ கூடாது என்று பாஜக வலியுறுத்தி வந்தது. இதை சொன்னதற்காக சிலர் எங்கள் மீது கோபப்பட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை விமர்சனம் தெரிவித்தார். இடைத்தேர்தலில் பலத்துடன் போட்டியிட வேண்டியது அவசியம் என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Tags : BJP ,Anamalai Sadal , By-election, AIADMK, defeat, BJP state president Annamalai
× RELATED மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து...