×

டிக்டாக் செயலியை தடை செய்ய அமெரிக்க அதிபருக்கு அதிகாரம்: நாடாளுமன்றம் ஒப்புதல்

வாஷிங்டன்: டிக்டாக் செயலியை தடை செய்ய அதிபர் ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல `டிக்-டாக்’ செயலி உலகமெங்கும் கொடி கட்டி பறந்தது. இந்த ‘டிக்-டாக்’ செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அரசு ஊழியர்கள் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் தடை விதித்தது. இதனிடையே அமெரிக்காவில் அரசின் மின்னணு சாதனங்களில் `டிக்-டாக்’ செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதன்படி அரசின் மின்னணு சாதனங்களில் இருந்து `டிக்-டாக்’ செயலியை அகற்றுவதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதற்குள் அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மின்னணு சாதனங்களிலும் இந்த செயலியை அகற்ற வேண்டும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது.இந்நிலையில் டிக்டாக் செயலியை தடை செய்ய அதிபர் ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றக் குழு  ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 179 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் செல்போனில் இருந்து ‘டிக்-டாக்’ செயலியை நீக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தது.
இதேபோல் நாட்டின் பாதுகாப்பு கருதி கனடாவில் அரசால் வழங்கப்படும் செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கு முன்பே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தாலும் அதனை நீக்க வேண்டும் என கனடா அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. பல ஐரோப்பிய நாடுகளும் அரசு ஊழியர்கள் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தவும், அரசின் மின்னணு சாதனங்களில் ‘டிக்-டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்யவும் தடைவிதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : US ,President ,Parliament , US President empowered to ban TikTok: Parliament approves
× RELATED துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் மகன் குற்றவாளி