×

ஈரோடு கிழக்கு தொகுதி நிலவரம் 22 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 32,959 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 10,727 வாக்குகளை பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கி இதுவரை நடந்த தேர்தல்களில் வெற்றி வித்தியாசத்தைவிட அதிக வாக்குகளுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி, ஈரோடு கிழக்கு தேர்தல் நிலவரம் 22 மாத திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை. தேர்தலுக்கு தேர்தல் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வாக்காளர்கள் தூக்கி எரிந்து விட்டார்கள். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்; மத்தியில் மாற்றத்தை கொண்டு வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என கூறினார்.


Tags : Minister ,Ragupathi ,Djaghagam ,East , Erode by-election, DMK rule, recognition, Minister Raghupathi
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...