இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அம்பானி குடும்பத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு: செலவுகளை ஏற்பது யார்?; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அம்பானி குடும்பத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அதற்கான செலவை அதானி குடும்பமே ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளின்  அச்சுறுத்தல் காரணமாக உலகின் டாப் பணக்கார்களில் ஒருவரான மும்பையை சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு ‘இசட் பிளஸ்’  பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது மனைவி நீதா அம்பானிக்கு கடந்த 2016ம்  ஆண்டு ஒய் பிளஸ் பாதுகாப்பை ஒன்றிய உள்துறையும், அவர்களின் குழந்தைகளுக்கு  கிரேடு செக்யூரிட்டி பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசும் வழங்குகிறது.

முகேஷ்  அம்பானி மற்றும் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பை  எதிர்த்து விகாஸ் சஹா என்பவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு  ஜூனில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விவகாரத்தை உச்ச  நீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு கொண்டு சென்றது. கடந்தாண்டு ஜூலையில்  திரிபுரா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை  விதித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தற்போது அளித்த உத்தரவில், ‘முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.

இதுவரை அவர்களுக்கான பாதுகாப்பு செலவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இனிமேல் அம்பானி குடும்பமே செலவை ஏற்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுவாக இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புக்கு ஒரு நபருக்கு மாதம் ரூ.40 முதல் ரூ.45 லட்சம் வரை செலவாகிறது.

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப்பின் 58 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்படுகின்றனர்.

இந்த கமாண்டோக்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஹெக்லர் மற்றும் கோச் எம்பி5 சப் மெஷின் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல நவீன ஆயுதங்களை கையில் வைத்துள்ளனர். இந்த துப்பாக்கி மூலம் ஒரு நிமிடத்தில் 800 ரவுண்டுகள் வரை சுட முடியும். இந்த இசட் பிளஸ் பாதுகாப்பானது, 6 அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வி.வி.ஐ.பி பாதுகாப்பின் மிக உயர்ந்த பாதுகாப்பு கட்டமைப்பாகும்.

Related Stories: