சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திமுக தலைவரும் , தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “70வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”,எனக் கூறியுள்ளார்.
அதே போல் பாஜகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதல்வர் திரு @mkstalin
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!,என்றார். தொடர்ந்து. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் , அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆதலால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்விட்டரில் அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
