உயர்கல்வி ஆர்வத்தை ஏற்படுத்த நடவடிக்கை நெல்லை கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் சந்திப்பு முகாம்-வாய்ப்பை பயன்படுத்த சிஇஒ அறிவுரை

நெல்லை : அரசுப்பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி பயிலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு நேரில் அழைத்து செல்லப்பட்டு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த நிகழ்ச்சிகளை நடத்தி ஊக்கப்படுத்தப்படுகின்றனர். நெல்லை அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த வாய்ப்பை பெற்றனர்.

தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில்  மற்றொறு சிறப்பு நடவடிக்கையாக நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பிளஸ்2 பயிலும் மாணவர்கள் தேர்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து உயர்கல்வி கட்டாயம் பயில வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த மாணவர்களை கல்லூரி கண்டுணர் சந்திப்பு என்ற உயர் கல்விக்கான ஊக்கமூட்டல் மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவர்களை அருகே உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் வாகனங்களில் அழைத்து செல்லும் நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின.  இதன் மூலம் அந்த கல்லூரிகளில் உள்ள  உயர்படிப்புக்கான வசதிகள், ஆய்வுக்கூட வசதிகள், உயர்கல்வி பயில்வதற்காக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள், கல்லூரிகள் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் மற்றும் கல்விக்கு மேல் கற்றுத்தரப்படும் பிற சிறப்பு திறன் நடவடிக்கைகள் போன்றவைகளை விளக்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன. கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்கள், நூலகங்கள், காட்சி தொடர்பியல் ஆய்வகம், விளையாட்டு அரங்கு வசதி, பிற திறன் வளர்ப்பு கற்பித்தல் வசதி போன்றவைகளை மாணவர்கள் பார்வையிட வாய்ப்பளிக்கப்பட்டது.

நெல்லை சேவியர்ஸ் கல்லூரி மற்றும் ஜான்ஸ் கல்லூரிகளில் நடந்த இந்த கண்டுணர் சந்திப்பு நிகழ்சிகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதி தொடங்கிவைத்துப்பேசினார். அப்போது அவர், அரசுப்பள்ளி மாணவர்கள் பிளஸ்2 முடித்ததும் கட்டாயம் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை பயிலவேண்டும். வருவாய் வசதி குறைவாக உள்ள மாணவர்களும் உயர்கல்வி கற்க பல்வேறு சிறப்பு வாய்ப்பு வசதிகளை அரசு தந்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வாய்ப்பை அதிகரிக்க செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ்2 முடிக்கும் மாணவர்கள் தங்கள் விருப்பமான பாடப்பிரிவுகளை விருப்பமான கல்லூரிகளில் தேர்வு செய்து பயிலவேண்டும். அதற்கு கல்வித்துறையும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

சேவியர் கல்லூரியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சாந்தகுமாரி வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், பொறுப்பு முதல்வர் லூர்துசாமி, திட்ட அலுவலர் டேவிட் அப்பாத்துரை, கல்வியியல் பயிற்சி பள்ளி பயிற்றுனர் மஞ்சுளா, திட்ட அலுவலர்கள் முருகன், மார்கரெட் சங்கீதா, ஜாண்பால் மற்றும் பலர் பேசினர்.

இதுபோல் ஜான்ஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் திருப்பதியை தொடர்ந்து கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக், கல்லூரி செயலர் ஜெயசந்திரன், ஒருங்கிணைப்பாளர் அருள்ஞானம், சென்னை முதுநிலை அறிவியல் அறிஞர் டேனியல் செல்லப்பா, என்எஸ்எஸ் அலுவலர் பெலிக்ஸ் பிரான்சிஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ்2 மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

Related Stories: