×

காசி ஆன்மிகப் பயணத்தின் முதல் அணியில் பங்கேற்று திரும்பிய 67 பயனாளிகள்: அமைச்சர் சேகர்பாபு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.!

சென்னை: காசி ஆன்மிகப்  பயணத்தின் முதல் அணியில் பங்கேற்று திரும்பிய 67 பயனாளிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது “இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில்  200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 இலட்சத்தை அரசே ஏற்கும்“ என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலும் ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, தகுதி வாய்ந்த 200 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 3 அணிகளாக இராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

அதன்படி, இராமேசுவரம் -  காசி ஆன்மிகப்  பயணத்திற்கான முதல் அணியில் பயணிக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 பயனாளிகள் கடந்த 2202.2023 அன்று இராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்களில் புனித நீராட, சுவாமி தரிசனம் செய்து,  வாரணாசி விரைவு ரயில் மூலம் காசிக்கு புறப்பட்டனர். இப்பயனாளிகளை கடந்த 23.02.2023 அன்று  சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன் சந்தித்து, ஆன்மிகப் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகளை தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.

இராமேசுவரம் -  காசி ஆன்மிகப்  பயணத்திற்கான முதல் அணியில் பயணித்து காசி தரிசனம் முடிந்து திரும்பிய பயனாளிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (28.02.2023) காலை சென்னை, எழும்பூர் இரயில் நிலையத்தில் பொன்னாடை அணிவித்து வரவேற்று, காசி ஆன்மிகப் பயணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது பயனாளிகள் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு காசி தீர்த்தம் மற்றும் பிரசாதங்களை வழங்கினர். பின்னர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் 165 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அதில் 27வது அறிவிப்பாக இராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணத்தை அறிவித்திருந்தோம். அதன்படி முதல் அணியில் 67 நபர்கள் கடந்த 22 ஆம் தேதி  இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு காசிக்கு சென்று  புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்து மகிழ்ச்சியோடு சென்னை திரும்பியிருக்கின்ற அனைவரையும் நானும், ஆணையாளர் அவர்களும்  வரவேற்று வழியனுப்பி வைத்தோம். இந்த ஆன்மிகப் பயணத்திற்குண்டான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் அரசு மானியமாக வழங்கி இருக்கிறது. 200 நபர்களை காசிக்கு அழைத்துச் செல்லும் இந்த பயண திட்டத்தில் முதற்கட்டம் இன்றைக்கு முடிவுற்று இருக்கின்றது.

இரண்டாவது கட்டம் மார்ச் மாதம் 1 ஆம் தேதியும், மூன்றாவது கட்டம் மார்ச் மாதம் 8 ஆம் தேதியும் தொடங்க இருக்கின்றது. 200 நபர்களை மூன்று பிரிவுகளாக பிரித்து காசிக்கு அழைத்துச் செல்கிறோம். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக இணை ஆணையர், உதவி ஆணையர், மருத்துவக் குழு உடன் சென்று வந்துள்ளனர். இக்குழுவினர் மிகச் சிறப்பாக இவர்களை வழிநடத்தி சென்று வந்திருக்கின்றார்கள். இந்த ஆன்மிகப் பயணத்திற்கு 590 நபர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 200 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த முதற்கட்ட பயணத்தில் 14 மாவட்டங்களை சேர்ந்த 67 பயனாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக 2023-2024 ஆம் ஆண்டு தொடங்குகின்ற பொழுது இந்த ஆன்மிகப் பயணத்திற்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை அழைத்து செல்வோம் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆன்மிகப் பயணம்  தொடரும். இந்த ஆன்மிகப் பயணம் யாருக்கும்  போட்டி அல்ல. இந்தப் பயணத்தை பொறுத்தளவில் கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையிலேயே நாங்கள் அறிவித்து விட்டோம். அதன் பிறகு தான் காசி தமிழ் சங்கமம் எல்லாம் உருவானது. ஆகவே போட்டி என்று எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு அரசு அறிவித்த இந்த திட்டத்திற்கு தான் போட்டியாக காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது  கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட திட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கான திட்டங்கள்.

ஆன்மிகவாதிகளாக இருந்தாலும் சரி, ஆத்திகர், நாத்திகர் என்றில்லாமல் அனைவருக்கும் சமநிலையிலிருந்து ஆட்சியை நடத்துகின்ற முதலமைச்சர் அவர்களின் அற்புதமான திட்டம் இந்த திட்டமாகும். இந்தாண்டு முதல் காசி ஆன்மிகப் பயண திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இதற்கு வருகின்ற வரவேற்பை பொறுத்து அரசினுடைய அனுமதி மற்றும் மானியங்களை பெற்று தொடர்ந்து எண்ணிக்கையை கூட்ட முயற்சிப்போம். மகா சிவராத்திரி விழா இது ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். கடந்த ஆண்டு மயிலை கபாலீஸ்வரர் கோயில் சார்பில் ஒரு இடத்தில் தான் மகா சிவராத்திரியை கொண்டாடினோம். இந்த ஆண்டு 5 இடங்களில்  மகா சிவராத்திரி நிகழ்ச்சியை சிறப்பாக முடித்து இருக்கின்றோம். இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. அப்படி ஏதேனும் குறைபாடுகள் அடுத்தடுத்து நடக்கின்ற நிகழ்வுகளில் அதனை சரி செய்வதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வோம்  என தெரிவித்தார்.

Tags : Kashi ,Minister ,Shekharbabu , 67 beneficiaries who participated in the first batch of Kashi spiritual journey and returned: Minister Shekharbabu welcomed them wearing bonnets.!
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை