சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 100 இடங்களில் கட்சிக்கொடியை ஏற்றுவதும் ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத செயல்களை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். விரைவில் தமிழகத்திற்கும் அவர் வருகிறார்.
இந்நிலையில் பிரியங்கா காந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத், மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன், எஸ்சி-எஸ்டி அணி தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி, சேவாதள தலைவர் குங் பூ விஜயன், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ பலராமன், மாநில துணைத்தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, மாநில செயலாளர் தளபதி பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பிரியங்கா காந்தி தமிழக வருகையின் போது முன்னெடுக்க வேண்டிய நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: தமிழகத்துக்கு பிரியங்கா காந்தி விரைவில் வருகின்றார். அதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருகின்ற 1ம் தேதி பகல் 12 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகின்றார் அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
