லாகூர்: ஐபிஎல் போட்டியை போன்று பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. அதன் 8வது தொடரின் லீக் ஆட்டங்கள் இப்போது நடக்கின்றன.
அதன் 15வது லீக் ஆட்டத்தில் ஷாகின் ஷா அப்ரிடி தலைமையிலான லாகூர் களாண்டர்ஸ், பாபர் அஸம் தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணிகள் மோதின. முதலில் ஆடிய லாகூர் அணி 20ஓவருக்கு 3விக்கெட் இழப்புக்கு 241ரன் குவித்தது. அதனையடுத்து 242ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெஷாவர் அணி களம் கண்டது. முதல் ஓவரை வேகம் அப்ரிடி வீச, முகமது ஹாரிஸ் எதிர்கொண்டார். அப்ரிடி வீசிய முதல் பந்தை பலமாக சிக்சருக்கு தூக்க முயன்றார் ஹாரிஸ். ஆனால் பந்துக்கு பதில் பாதி பேட்தான் பறந்தது. கைப்புடி மட்டும் ஹாரிஸ் வசம் இருந்தது. வேறு பேட் கொண்டு வந்து 2வது பந்தை எதிர்கொண்ட ஹாரிஸ், அதில் கிளீன் போல்டு ஆனார். ஆனாலும் சமாளித்த பெஷவார் அணி 20 ஓவரில் 9விக்கெட் இழந்து 201 ரன்தான் எடுத்தது. அதனால் நடப்பு சாம்பியன் லாகூர் 40 ரன் வித்தியாசத்தில் வென்றது.
* பாகிஸ்தானில் சிதறவிட்ட பாலாஜி இப்படி பேட்கள் உடைந்து சிதறுவது கிரிக்கெட் களத்தில் வாடிக்கைதான். 2004ம் ஆண்டு கங்குலி தலைமையில் இந்திய அணி பாகிஸ்தான் சென்றது. லாகூரில் நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தமிழக வீரர் வேகம் லட்சுமிபதி பாலாஜி, வேகம் சோயிப் அக்தர் வீசிய பந்தை எதிர்கொண்டார். 2 வேகமும் மோதியதால் பாலாஜி பேட் துண்டாகி பறந்தது. ஆனாலும் பாலாஜி ஓடி ரன் சேர்த்தார். அந்த ஆட்டத்தில் இந்தியாவும் 40ரன் வித்தியாசத்தில் வென்றது. அன்றிரவு இந்திய வீரர்களுக்கு விருந்து அளித்த அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷரப், ‘பாலாஜியை பாராட்டியதுடன்’, அந்த சம்பவம் குறித்து பலமுறை வியந்து பேசினாராம்.