5வது முறையாக உலக கோப்பையை வென்ற கேப்டன்: ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த மெக் லானிங்

கேப்டவுன்: 8வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை தொடரில் கேப்டவுனில் நேற்று நடந்த இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. பெத் முனி நாட்அவுட்டாக 53 பந்தில் 74 ரன் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. டி.20 உலக கோப்பையில் அந்த அணிக்கு இது 6வது பட்டமாகும்.

மேலும் 2010 2012 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் ஹாட்ரிக் உலகக் கோப்பையை பெற்ற ஆஸ்திரேலியா, தற்போது 2018, 2020 மற்றும் 2023ம் ஆண்டுகளிலும் உலகக் கோப்பையை வென்று 2வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறது. அந்த அணியின் பெத் முனி ஆட்ட நாயகி விருதும், அஷ்லேயி கார்ட்னர் தொடர் நாயகி விருதும் பெற்றனர். வெற்றிக்கு பின் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் கூறுகையில், இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நாங்கள் உணர்ந்தோம். ஆனால் நாங்கள் நன்றாக பந்துவீச வேண்டும். இது அரையிறுதியைப் போல சிறப்பாக இல்லை. தென்ஆப்ரிக்கா மீது அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த குழுவுடன் வெற்றியை ரசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு சிறப்பு குழு.

வீராங்கனைகள் மட்டுமின்றி, நிறைய முயற்சிகளை எடுத்து, எங்களை சுதந்திரமாக ஆட அனுமதித்த பயிற்சியாளர்கள் உட்பட இங்கே இருக்கும் அம்மா அப்பா, குடும்பத்தினருக்கு நன்றி, என்றார். 30 வயதான மெக் லானிங் கேப்டனாக 2014, 18, 20, 23 ஆகிய ஆண்டுகளில் டி.20 உலக கோப்பை மற்றும் 2022ல் ஐசிசி ஒருநாள் போட்டி உலக கோப்பை தொடர் சாம்பியன் என 5வது முறையாக ஐசிசி உலக கோப்பையை வென்றுள்ளார். அதன் மூலம் ரிக்கிபாண்டிங்கின் (2003, 2007ல் உலக கோப்பை, 2006, 2009ல் சாம்பியன் டிராபி), 4 முறை உலக கோப்பையை வென்ற சாதனையை முறியடித்துள்ளார். டோனி 3 முறை (2007ல் டி,20, 2011ல் 50 ஓவர், 2013ல் சாம்பியன் டிராபி) இந்திய அணிக்காக பட்டம் வென்று கொடுத்து அடுத்த இடத்தில் உள்ளார்.

ஐசிசி உலக கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையில் 7, டி.20 உலக கோப்பையில் 6, ஆடவர் அணி 50 ஓவர் உலக கோப்பையை 5, டி.20 உலக கோப்பையை 1, சாம்பியன் டிராபியை 2 முறை என ஒட்டுமொத்தமாக 21 ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 9வது மகளிர் டி.20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர், அக்டோபரில் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

* ரூ.8.27 கோடி பரிசு அள்ளிய ஆஸி.

பைனலில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி நேற்று சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 8.27 கோடி) பரிசு பெற்றது. தோல்வி அடைந்த தென்ஆப்ரிக்காவுக்கு ரூ.4.13 கோடி கிடைத்தது. அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு தலா ரூ.1.73 கோடியும், லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கு தலா ரூ.24.83 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories: