×

வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதி: தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி

ஈரோடு: வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை அடுத்து, இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் 18ம் தேதி வெளியானது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ்  இளங்கோவன், அதிமுக வேட்பாளராக   தென்னரசு, தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம்  தமிழர் கட்சியின்  வேட்பாளராக  மேனகா மற்றும் இதர கட்சியினர், சுயேட்சை  வேட்பாளர்கள் என 77  பேர் களத்தில் உள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொகுதியில் களை கட்டிய பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பிரசாரத்திற்கு வந்த அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த வெளிமாவட்ட முக்கிய நிர்வாகிகள்,   தொண்டர்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் மாலையே சென்றனர். இதனால், ஈரோடு மாநகர்  இயல்பு நிலைக்கு  திரும்பியது.  இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான  வாக்குப்பதிவு இன்று (27ம் தேதி) தொடங்கியது.

1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்களும், 1  லட்சத்து 16 ஆயிரத்து 497  பெண்  வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள்  25 வாக்காளர்களும் என மொத்தம் 2  லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் வாக்கினை பதிவு  செய்ய  உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி  வரை தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம். வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்  தனது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால்  அங்கீகரிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.  

இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு வரும் அனைவரும் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது; வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியான சூழல் நிலவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக ஆய்வு செய்த பிறகே பயன்படுத்தப்படுகின்றன. எந்தவித ஆதாரமும் இன்றி புகார் அளித்தால் போலீசில் ஒப்படைக்கப்படுவர் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அலுவலர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Returning ,Sivakumar , polling station, evening, to vote, permit, election, officer, interview
× RELATED தேர்தல் பணி அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்