×

வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த 3 பேர் கைது: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து விற்பனை

சென்னை: வடபழனி பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா எண்ணெய், 3 கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வடபழனியில் அதிகளவில் கஞ்சா மற்றும் கஞ்சா எண்ெணய் விற்பனை செய்யப்படுவதாக வடபழனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வடபழனி பொன்னம்மா 1வது தெருவில் நேற்று முன்தினம் கண்காணித்தபோது, பைக் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

இதை கவனித்த போலீசார் 3 பேரை பிடித்து சோதனை  செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 3 கிலோ கஞ்சா, 50 கிராம் கஞ்சா எண்ணெய் இருந்தது. அவர்கள் 3 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் நங்கநல்லூர் பி.வி.நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி(27), பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த திலீப்குமார்(29), சந்தோஷ்(21) என தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெயை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்துள்ளனர்.

அதைதொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 50 கிராம் கஞ்சா எண்ணெய், விற்பனைக்கு பயன்படுத்திய பைக் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள முக்கிய கஞ்சா வியாபாரி மூலம் ஆந்திராவில் இருந்து கஞ்சா எண்ணெய் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. எனவே, கடத்தலின் பின்னணியில் உள்ள கஞ்சா வியாபாரி குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vadapalani ,Andhra Pradesh , Vadapalani, sale of ganja oil, 3 arrested
× RELATED இறைவன் விட்ட வழி என்று வாழ்க்கையில் இருக்க முடியுமா?