×

அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரை மீண்டும் ஆக்கிரமிக்கப்படும் அவலம்: தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து செங்கல், மணல் வியாபாரம் செய்து வருகின்றனர். அடையாறு ஆறானது படப்பை, ஆதனூர் பகுதியில் உற்பத்தியாகி முடிச்சூர், திருநீர்மலை, பொழிச்சலூர் மற்றும் சென்னை அடையாறு வழியாக சென்று இறுதியில் கடலில் கலக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரும் இந்த அடையாறு ஆற்றின் மூலமாகவே கடலில் கலக்கிறது. அவ்வாறு, கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மூழ்கி, ஏராளமான உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது.
மீண்டும் அதுபோன்று துயரமான சம்பவம் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் கடந்தாண்டு பல கோடி ரூபாய் செலவில் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் முதல் ஆறு கடலில் கலக்கும் இடம் வரை, அதன் இரு பக்க கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஏராளமான வீடுகள் மற்றும் கடைகளை வருவாய் துறை அதிகாரிகள் முறையாக அகற்றினர். மேலும், அகற்றிய குடியிருப்புகளுக்கு ஈடாக சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் மாற்று குடியிருப்புகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதனால் கடந்த மழைக் காலத்தில் அதிகமாக மழை பெய்தபோதும் கூட, அடையாறு ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாக தேங்கி நிற்காமல், அவை அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் செல்லாமல், வெள்ளம் நேராக கடலில் கலந்தது. இதனால் எவ்வித உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இந்தநிலையில், அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீண்டும் சிலர் ஆக்கிரமித்து அவற்றில் செங்கல், மணல் விற்பனையை ஆரம்பித்து வருகின்றனர். இதனை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால், பெரும் முயற்சியில் தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து, அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பணிகள் யாவும் பாழாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தனைக்கும் இந்த இடத்தின் அருகிலேயே பொதுமக்களுக்கான இலவச கழிப்பறையும் அமைந்துள்ளது.

அதன் வழிகளை மறித்து லாரிகள் மூலம் செங்கல், மணல், ஜல்லிகளை ஏற்றும், இறக்கும் பணிகளில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மீண்டும் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் முன் சம்பந்தப்பட்ட வருவாய்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையை ஆக்கிரமித்து செங்கல், மணல், ஜல்லிகளை குவித்து வைத்து நடைபெறும் விற்பனையை தடுத்து நிறுத்தி, அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் மீண்டும் ஆக்கிரமிக்காத வகையில் அவற்றில் எச்சரிக்கை விளம்பர பதாகைகள் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Ayadarai ,Anakaptur , People demand to stop the danger of re-occupation of Adyar river banks
× RELATED அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையில்...