×

அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை: குடியிருப்புவாசிகள் எதிர்ப்பால் பரபரப்பு

பல்லாவரம்: அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு, சாந்தி நகர் உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. அவற்றில் 677க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு, அரசின் குடிசை மாற்று வாரியம் சார்பில் தாம்பரம் அருகே கிஷ்கிந்தா செல்லும் சாலையில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் கட்டமாக 25 வீடுகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கி தரப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட பின்னரும் பலர் தங்களது ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யாமல் தொடர்ந்து அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளிலேயே வசித்து வந்தனர்.

இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பலமுறை நீர்வளத்துறை, வருவாய் துறை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில், இடத்தை காலி செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் சற்றும் செவி சாய்க்காமல் இருந்து வந்தனர். இதனிடையே, புதிய வீடுகள் வழங்கப்பட்டவர்களின் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக நேற்று மாலை பல்லாவரம் வட்ட வருவாய் துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கூட்டு முயற்சி மேற்கொண்டனர்.

அப்போது அதிகாரிகளுக்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருந்த போதிலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உறுதியாக இருந்தனர். இதனால் தாய் மூகாம்பிகை நகர் 2வது தெருவில் வசித்து வந்த 6 வீடுகளை சேர்ந்தோர் மற்றும் சாந்தி நகர் பகுதியில் ஒரு வீடு என மொத்தம் 7 வீடுகளில் வசித்து வந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து, தங்களது வீடுகளை காலி செய்ததுடன் தங்களது வீட்டின் கதவு, ஜன்னல், வாசற்கால் மற்றும் கிரில் கேட் ஆகியவற்றை கடப்பாரை கொண்டு பெயர்த்து எடுத்து, லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.

அப்போது, நேற்று காலி செய்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணிகள் விரைவில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு சங்கர் நகர் பல்லாவரம் குன்றத்துார் மற்றும் தாம்பரம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை: குடியிருப்புவாசிகள் எதிர்ப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Anakaptur Adyadarai river river ,Pallavaram ,Anakaputtur Adadaram River ,Thai Mookampika Nagar ,Tobikana Street ,Shanti Nagar ,River River River ,Anakaptur ,
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...