கொடைக்கானலில் கிளைமேட் சூப்பர் பகலில் இதமான வெயில் இரவில் நடுங்கும் குளிர்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பகலில் இதமான வெயிலும், இரவில் நடுங்கும் குளிரும் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் குஷியடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் என அனைத்து தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கையின் பசுமை கொஞ்சும் அழகினை கண்டு ரசித்தனர். இதுதவிர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைய்டிங் செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். கொடைக்கானலில் கடந்த பல நாட்களாக பகலில் இதமான வெயிலும், இரவில் நடுங்கும் குளிரும் நிலவி வருகிறது.

இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து சென்றனர். கொடைக்கானலில் மாலை நேரம் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை கடும் குளிர் நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஏரி பகுதி அருகேயுள்ள ஜிம்கானா பகுதியில் உறைபனி ஏற்படுகிறது. இந்த கடும் குளிர் இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குமரியில் குவியும் மாணவர்கள்: குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக கன்னியாகுமரி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

அதோடு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை புரிந்தனர். இவர்கள் அதிகாலையில் திரிவேணி சங்கமம் பகுதி கடற்கரையில் அமர்ந்தபடி சூரிய உதயம் கண்டு ரசித்தனர். பின்னர் கடலில் புனித நீராடி மகிழ்ந்தனர்.  அதன்பின் பூம்புகார் படகு சேவை மூலம் கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று கண்டு ரசித்தனர். திருவள்ளுவர் சிலைக்கு செல்ல அனுமதி வழங்காததால் விவேகானந்தர் பாறையில் நின்றபடி சிலையை பார்த்து மகிழ்ந்தனர்.

Related Stories: