புதிதாகப் பிறந்த 355 அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகளை நாகை கடலில் விட்ட வனத்துறை

நாகை: 250 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழும் 355 அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் இன்று நாகை கடலில் விடப்பட்டன.கடல் வளத்தின் காவலன் என்று அழைக்கப்படும் அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 250 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடியவை. இவற்றின் இனப்பெருக்கம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். காலநிலை மாற்றம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள் அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டுச் செல்கின்றன.

இந்நிலையில் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்து வரும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள், சீர்காழி, நாகை, கோடியக்கரை பகுதிகளில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து, முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை அடைகாத்து, குஞ்சு பொரிக்கச் செய்து கடலில் விடுகின்றனர். நாகை, சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட முட்டைகளில் இருந்து ஏறத்தாழ 355 ஆலிவ் ரிட்லி ஆமைக் குஞ்சுகள் பொரிந்துள்ளன.

இவற்றை இன்று வன உயிரின சரகர் ஆதிலிங்கம் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் நாகை, சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் கடலில் விட்டனர். அப்போது பிறந்த குஞ்சுகள் தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன. இதற்காக எதிர் திசையில் காத்திருக்கும் முட்டையிட்ட தாய் ஆமைகள் கடல் திரும்பும் குஞ்சுகளை அரவணைத்து ஆழ்கடலுக்கு அழைத்து செல்லும் எனக் கூறப்படுகிறது. மீன் இனப்பெருக்கத்திலும், கடலை தூய்மைப்படுத்துவதிலும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: