×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு; டெல்லி துணை முதல்வர் கைதா?: பதற்றத்தால் 144 தடை உத்தரவு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, இன்று டெல்லி சிபிஐ முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. அவர், ‘தான் கைது செய்யப்படலாம்’ என்று தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் அலுவலகம் மற்றும் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்விகள் எழுப்பி பதில்களைப் பெற்று பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில், டெல்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென மணிஷ் சிசோடியா கேட்டிருந்தார்.

இதையடுத்து மணிஷ் சிசோடியா சிபிஐ விசாரணைக்கு இன்று அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்நிலையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை இன்று சிபிஐ விசாரணைக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி தலைவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக ஆம்ஆத்மி தலைவர்கள் சிலர் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டனர். மணிஷ் சிசோடியா இன்று காலை 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு, ெடல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு சிறிது நேரம் தியானம் இருந்துவிட்டு, காரில் அவர் சென்ற போது வழிநெடுகிலும் ஆம்ஆத்மி தொண்டர்கள் நின்று கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது பேசிய மணிஷ் சிசோடியா, ‘சில மாதங்கள் நான் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்காக கவலைப்பட வேண்டாம்’ என்றார். சிபிஐ விசாரணைக்கு முன்னதாகவே மணிஷ் சிசோடியா இவ்வாறு கூறியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் லோகி சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வந்தார்.

அவர் தனது தரப்பு வாக்குமூலத்தை சிபிஐ அதிகாரிகளிடம் பதிவு செய்தார். சிபிஐ அதிகாரிகள் தரப்பில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பப்பட்டது. இன்று மாலை வரை விசாரணை தொடர்ந்ததால் டெல்லி அரசியலில் பரபரப்பு நிலவியது.

Tags : Delhi ,chief minister , Liquor Policy Violation Case; Delhi deputy chief minister?: 144 Prohibitory Order due to tension
× RELATED திகார் சிறையில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் மனைவி சுனிதா சந்திப்பு