×

ஆள் கடத்தல், கொலை மிரட்டல் புகார்களில் அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்குப்பதிய உத்தரவு

திருவில்லிபுத்தூர்: ஆள் கடத்தல், போலியாக ஆவணங்கள் தயார் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மீது வழக்குப்பதிய திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் ராஜவர்மன். இவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆவார்.  ராஜவர்மன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட சிலர் கடந்த 2018ல் கூட்டாக பட்டாசு தொழிற்சாலை நடத்த முடிவு செய்து ஆவணங்களை பதிவு செய்துள்ளனர். ஆனால் ஒரு வாரத்திற்குள், ராஜவர்மன் உள்ளிட்ட 3 பேர் தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியாது என ரவிச்சந்திரனிடம் கூறியுள்ளனர். எனவே தங்களுக்கான முதலீட்டு தொகையை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். இதன்பேரில் ராஜவர்மன் உள்ளிட்ட 3 பேருக்கும் அவர்களது முதலீட்டு தொகையை ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார். தொடர்ந்து ரவிச்சந்திரன் மட்டும் பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்துள்ளார்.
 
தொழில் நல்லபடியாக நடந்து வந்த நிலையில், ராஜவர்மன் உள்ளிட்ட சிலர் இணைந்து போலியான ஆவணங்களை தயாரித்து, ரவிச்சந்திரனிடம் தாங்கள் தொடர்ந்து பங்குதாரராக உள்ளதாகவும், தங்களுக்குரிய முதலீட்டு தொகையை பிரித்து தரும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ரவிச்சந்திரன் பணம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் விடுதிக்கு அவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு 2 காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.     
     
இந்நிலையில், தனக்கு பாதிப்பு ஏற்படுத்திய ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார்.  திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வள்ளி மணாளன், ரவிச்சந்திரன் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதால், குற்றச்செயலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் 2 பேர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : Maji MLA , AIADMK ex-MLA ordered to prosecute in cases of human trafficking and death threats
× RELATED கொலை முயற்சி வழக்கில் அதிமுக மாஜி...