×

ஈரோடு கிழக்கு தொகுதி: நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (27.02.2023) நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றது. தொகுதி முழுவதும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர்  களத்தில் உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தளம், வீல் சேர் போன்றவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகியிருக்கிறது. நேற்றைய தினமே வெயில் சதமடித்ததால், வாக்காளர்கள் வசதிக்காக 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடையன்காட்டுவலசில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வாக்குச்சாவடி மையம்  அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடுகள் போடப்படுகின்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமாக 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக  கண்காணிக்கப்படுகிறது.

Tags : Erode ,East Block , Erode East Constituency: All arrangements are ready as polling will be held tomorrow!
× RELATED சூதாடிய 5 பேர் கைது