×

ஆழியாற்றில் தண்ணீர் திருட்டு தடுக்க 2 மாநில அதிகாரிகள் திடீர் ஆய்வு: குழாய்களை பறிமுதல் செய்து கடும் எச்சரிக்கை-பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில், தண்ணீர் திருட்டை தடுக்க இருமாநில அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழாய்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விதி மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில் இருந்து விவசாய பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில், கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீர், மணக்கடவு என்னும் பகுதியில் உள்ள தடுப்பணையில் நீர் அளவீடு செய்த பின்னர் கேரள பகுதிக்கு செல்கிறது. ஆனால், ஆழியாற்றில் செல்லும் தண்ணீரை கரையோரத்தில் உள்ள பலர், மோட்டார் வைத்து குழாய் மூலம் தண்ணீர் திருடுவது தொடர்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஆழியாற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, தமிழக மற்றும் கேரள மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டு கள ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அப்போது, ஆழியாறு செல்லும் வழித்தடமான ஆனைமலை மற்றும் அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட தோட்டத்தினர் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது தெரியவந்தது. இதையடுத்து, தண்ணீர் திருடுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தண்ணீர் திருடுவதற்கு  மின்மோட்டார் வைத்த உரிமையாளர்களிடம், வரும் காலங்களில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. உடனே மோட்டார்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பறிமுதல் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பிஏபி கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில், ‘‘ஆழியாற்றிலிருந்து புதிய  ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், கேரள மாநில பகுதிக்கும் தண்ணீர் திறப்பது தொடர்கிறது. சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பாசன நிலத்துக்கு முறையாக தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதற்கிடையே, பிஏபி திட்டத்தில் ஏற்படும் தண்ணீர் திருட்டுகளை கண்டறிய நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மின்வாரியம் மற்றும் காவல் துறை இணைந்து கூட்டு கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  வருங்காலங்களிலும், ஆழியாற்றிலிருந்து விதிமீறி தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்களின் விவசாய தோட்டத்துக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், தண்ணீர் திருட்டை தடுப்பதற்கு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினரும், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Tags : Azhiyar , 2 State officials make sudden inspection to prevent water theft in Azhiyar: Pipes seized and strong alert-campaign
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...