ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று இறுதிகட்ட பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் காந்திசிலை அருகேபிரசாரத்தை நிறைவு செய்தார். அந்த பகுதியில் கூட்டத்தை கூட்டுவதற்காக குத்தாட்டம் நடத்தப்பட்டது. அப்போது எடப்பாடி பேசியபோது, ‘‘ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கும் கொடநாடு வழக்கிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?’’ என அந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்படுவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதை அறிந்து தடுமாற்றத்துடன் கேள்வி எழுப்பினார். ‘‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்’’ என்ற பழமொழியை மாற்றி, ‘‘மாமியார் உடைத்தால் பொன்குடம், மருமகள் உடைத்தால் மண்குடம்’’ என பேசினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் உள்ள பாஜவை மறைமுகமாக சாடினார்.
* ஒரு சிப்பம் அரிசியுடன் கூடுதல் பரிசு தருவதாக அதிமுகவினர் டோக்கன் விநியோகம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவினர் 2000 ரூபாய் ரொக்கம், வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர், பட்டு புடவை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை ஏற்கனவே வழங்கியுள்ளனர். இந்நிலையில் இறுதி கட்டமாக நேற்று வீடு வீடாக சென்று அதிமுகவினர் டோக்கன் விநியோகம் செய்தனர். அப்போது வாக்காளர்களிடம், ‘‘நாங்கள் வர சொல்லும் இடத்திற்கு வந்து இந்த டோக்கனை காண்பித்தால் ஒரு சிப்பம் அரிசியுடன் கூடுதல் பரிசு பொருட்கள் அல்லது பணம் வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளனர்.
