×

ஊத்தங்கரை கோயிலில் திருடிய ஐம்பொன் சிலைகளை மீண்டும் போட்டு சென்ற கும்பல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே வாசுதேவ கண்ணன் கோயிலில், திருடிய ஐம்பொன் சிலைகளை மீண்டும் போட்டு சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்றுப்படுகையில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாசுதேவ கண்ணன் பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 19ம் தேதி இரவு, இந்த கோயில் கதவின் பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள் கருவறையில் இருந்த உற்சவ மூர்த்திகள் வாசுதேவ கண்ணன், ராதா-ருக்மணி, ராமானுஜர், சுதர்சன ஆழ்வார் ஆகிய ஒன்றரை அடி கொண்ட 5 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி கேமராவின் ஹாட் டிஸ்க்கையும் கையோடு எடுத்துச் சென்றனர்.

புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வாசுதேவ கண்ணன் கோயில் முன் உள்ள சின்டெக்ஸ் தொட்டியின் மேல் பகுதி மற்றும் சில இடங்களில் துளையிடப்பட்டு, அதில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற மக்கள், தொட்டியில் பார்த்தபோது அதற்குள் கொள்ளை போன 5 ஐம்பொன் சிலைகளும் கிடந்தன. அவற்றை  கிராம மக்கள் வெளியே எடுத்து, பூஜை செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் மீண்டும் அங்கு வந்து போட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags : Aimbon ,Uthangarai , The gang put back the idols of Aimbon that they had stolen from the Uthangarai temple
× RELATED மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு