×

சிறுபான்மையினர், தலித்துகள், பெண்களை குறிவைத்து வெறுப்பு தீயை பரப்புகிறது பாஜ: காங்கிரஸ் மாநாட்டில் சோனியா ஆவேசம்

ராய்ப்பூர்: ‘‘சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் என நாட்டின் அனைத்து தரப்பினரையும் கொடூரமாக குறிவைத்து பாஜ வெறுப்பு தீயை பரப்புகிறது,’’ என காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி ஆவேசமாக பேசினார். சட்டீஸ்கர், நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு நடந்து வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி, மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் வரும் 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தல் கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

கூட்டத்தில் சோனியா காந்தி நேற்று பேசியதாவது: பாஜ வெறுப்பு தீயை பரப்புகிறது. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்களை பாஜ கொடூரமாக குறிவைக்கிறது. பாஜ ஆட்சியை நாம் வலிமையுடன் எதிர்க்க வேண்டும். மக்களிடம் சென்று நமது கருத்துக்களை தெளிவாக கூற வேண்டும்.  கட்சிக்கும், நாட்டுக்கும் கடமையாற்றுவதில் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பிரத்யேகமான பொறுப்பு உள்ளது. பிரதமர் மோடியும்,பாஜவும் நாட்டின்
ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றிவிட்டனர். இது காங்கிரசுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் சவாலான காலம்.

ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு சலுகைகளை அளிப்பதன் மூலம் நாட்டில் பொருளாதார பேரழிவு ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் என்பது ஒரு கட்சி மட்டும் அல்ல, அனைத்து மதங்கள், சாதிகள் மற்றும் பாலினங்களின் எண்ணங்களையும் அது பிரதிபலிக்கிறது. அரசியல் சட்டத்தின் சிறப்பு தன்மைகளை சிதைக்கும் வகையில் பாஜவின் செயல்பாடுகள் இருக்கின்றன. நாம், நமது தனிப்பட்ட லட்சியங்களை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டும். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சந்தித்து பாஜ ஆட்சியை வீழ்த்த வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மாநாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியல் விவகார தீர்மானத்தில், ‘2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரசின் கொள்கைகளுடன் உடன்படும் ஒத்த எண்ணம் கொண்ட மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் பிராந்திய கட்சிகளை அடையாளம் காணவும், அணிதிரட்டவும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும், எந்தவொரு மூன்றாம் கூட்டணி அமைந்தாலும், அது பாஜவுக்குதான் சாதகமாக முடியும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, காங்கிரஸ் காரிய கமிட்டியில் 50 சதவீத இடங்கள் தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்பட்டோர், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்குவதற்கு  கட்சியின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.   இதனால் செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 25ல் இருந்து 35 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘அரசியல் பயணம் முடிந்தது’
சோனியா காந்தி பேசுகையில், ‘‘இந்திய ஒற்றுமை நடைபயணம் காங்கிரசுக்கு திருப்புமுனையாக இருந்தது. இந்த யாத்திரையுடன் எனது அரசியல் பயணமும் நிறைவடைகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையுடன் 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில்  கட்சி பெற்ற வெற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு திருப்தி அளிக்கிறது. ராகுலின் பயணத்துடன் எனது அரசியல் பயணமும் நிறைவடைவது எனக்கு மகிழ்ச்சி’’ என்றார்.

* கூட்டணிக்கு தயார்
மாநாட்டில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே,‘‘டெல்லியில் இருக்கும் நாட்டின் முதன்மை சேவையாளர் தன்னுடைய சொந்த நண்பருக்குதான் சேவை செய்து வருகிறார். ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களின் டிஎன்ஏ ஏழைகளுக்கு எதிரானது. நாட்டின் தற்போதைய நிலைமைக்கு எதிராக மக்கள் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும். ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையால் மட்டுமே திறமையான மற்றும் சிறந்ததொரு ஆட்சியை அளிக்க முடியும். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஒரே கருத்துகளை கொண்ட கட்சிகளுடனான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாட்டு மக்களுக்கு சேவையாற்றியது. மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கு கொண்ட பாஜ அரசை தோற்கடிப்பதற்கு ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார்.

* பிரியங்காவை வரவேற்று மலர் சாலை
கட்சி மாநாட்டில் பங்கேற்க பொது செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ராய்ப்பூருக்கு விமானத்தில் வந்தார். அவரை வரவேற்று கட்சி நிர்வாகிகள், ராய்ப்பூர் விமான நிலையம் அருகே பல மீட்டர் தொலைவுக்கு ரோஜா இதழ்களை தூவி மலர் சாலையாக்கி அசத்தியிருந்தனர். மாநாட்டில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று
உரையாற்றுகிறார்.

* விரக்தியை காட்டுகிறது
முன்னாள் அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றி வருகிறது என்ற சோனியா காந்தியின் பேச்சு அரசியல் அமைப்புகள் மற்றும் அதன் சுயாட்சி மீதான தாக்குதல். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே எதிர்க்கட்சிக்கு செல்வாக்கு என சுருங்கி விட்டதால் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாட்டை காட்டுகிறது. நாட்டு மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை அவர் ஏன் குறைகூறுகிறார். பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியின் வளர்ச்சியின் பலன்களை தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் அல்லது நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் பெற்று வருகின்றனர் என்பதே அப்பட்டமான உண்மை. அதை சோனியா காந்தியும், அவருடைய கட்சியினரும் ஏற்க மறுக்கின்றனர். சோனியாவின் பேச்சு அவரது விரக்தியை காட்டுகிறது’’ என்றார்.

Tags : Sonia ,BJP ,Congress , Sonia lashed out at BJP: Congress conference fanning flames of hatred targeting minorities, Dalits, women
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....