×

அரிசி ஆலைகள் கழிவுநீரால் மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செயல்படும் நவீன அரிசி ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் சாம்பல் துகள்களால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் நகரத்தை ஒட்டிய புத்தேரி, வெள்ளகுளம், கீழம்பி, அரக்கோணம் சாலை, பாக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புகைபோக்கிகளில் சல்லடை பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் அரிசி ஆலைகளில் நெல் ஊறல் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கழிவுநீர் சாலைகள் மற்றும் வயல்வெளி பகுதிகளில் இரவு நேரங்களில் திறந்து விடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் சாலைகளில் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளது.

அரிசி ஆலைகளில் புகைப்போக்கிகளில் சல்லடைகள் போடப்பட்டு அதில் கரிதுகள்கள் வடிகட்டப்பட்ட பிறகே புகை வெளியேற்றப்பட வேண்டும். அதன்பிறகு சல்லடை வழியாக தேங்கும் கரித்துகள்கள் தொட்டி போன்ற அமைப்பில் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். இந்த கரித்துகள்கள் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பல அரிசி ஆலைகளில் எவ்வித வசதியும் செய்யாததால் கரித்துகள் காற்றில் பறக்கின்றன. இது சாலையில் வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அரிசி ஆலைகளில் இருந்து ஊறல் தண்ணீர் இரவு நேரங்களில் வெளியேற்றப்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது. கரிதுகள்கள் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துவைத்து காயப்போடும் துணிகளின் மீது படிகின்றன. எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி, முறையாக கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புகைபோக்கிகளில் சல்லடை பொருத்துதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். பின்பற்றாத நவீன அரிசி ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.



Tags : Kanchipuram , People suffering due to rice mills sewage: Kanchipuram people urged to take action
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...