செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோயினால் விவசாயிகளுக்கு கால்நடை இறப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. கால்நடை வளர்ப்பவர்கள் சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2,54,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், வரும் மார்ச் 1 முதல் 21ம் தேதி வரை 21 நாட்களுக்கு 3ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இதில் கால்நடை உரிமையாளர்கள் பங்கேற்று, தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்துக்கு மேற்பட்ட இளங்கன்றுகள் போன்றவற்றுக்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்தார்.
